
சபரிமலை பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஹெலிகாப்டர், ஹெலிபேட்டின் கான்கிரீட்டில் சிக்கியது.
அங்கிருந்த தீயணைப்பு வீரர்களும், காவலர்களும் இணைந்து ஹெலிகாப்டரை தள்ளி மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, நான்கு நாள்கள் சுற்றுப்பயணமாக கேரள மாநில தலைநகா் திருவனந்தபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.
திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் நேற்றிரவு தங்கிய குடியரசுத் தலைவர், இன்று காலை சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
திருவனந்தபுரத்திலிருந்து இருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் தரையிறங்கினார்.
அப்போது, ஹெலிபேடின் கான்கிரீட்டில் ஹெலிகாப்டரின் சக்கரம் சிக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்த தீயணைப்பு வீரர்களும், காவலர்களும் இணைந்து ஹெலிகாப்டரை தள்ளி மீட்டனர்.
தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் பம்பா நிதிக் கரைக்குச் சென்ற திரெளபதி முர்முக்கு திருவிதாங்கூா் தேவஸ்வம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து இருமுடிக் கட்டி, மலையேறும் ஜீப் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் சபரிமலை சன்னிதானம் சென்றடைந்தார்.
இருமுடியுடன் 18 படிகள் ஏறிய திரெளபதி முர்மு, ஐயப்பனை தரிசனம் செய்தார்.
ஹெலிகாப்டர் சிக்கியது எப்படி?
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், நிலக்கல் சென்றடையும் வகையிலேயே பயணத் திட்டம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் வானிலை மோசமாக இருந்ததால் பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் ஹெலிகாப்டரை தரையிறக்க நேற்றிரவு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் கான்கிரீட் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலைதான் ஹெலிபேட் அமைக்கும் பணி நிறைவடைந்ததால், கான்கிரீட் முழுமையாக காயாமல் இருந்துள்ளது.
இதன்காரணமாக குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சக்கரம் கான்கிரீட்டில் சிக்கியுள்ளது.
இருப்பினும், உடனடியாக ஹெலிகாப்டர் மீட்கப்பட்டு, பயணத்தில் மாற்றமின்றி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பம்பை சென்றடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.