பிகார் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!

பிகார் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
பிகார் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
Published on
Updated on
1 min read

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

மேலும், துணை முதல்வர் வேட்பாளராக விகாஸ்ஷீல் இன்சான் கட்சியின் (மக்கள் மேம்பாட்டுக் கட்சி) தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிகார் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும், காங்கிரஸுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில், சில தொகுதிகளில் இரண்டு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

மகாகத்பந்தன் கூட்டணிக்குள் (இந்தியா கூட்டணி) நிலவி வந்த சில சிக்கல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெலாட், கிருஷ்ணா அல்லவாரு உள்ளிட்டோர் தேஜஸ்வி மற்றும் லாலு பிரசாத் யாதவை சந்தித்து புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அசோக் கெலாட், விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பிகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அசோக் கெலாட், தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராகவும், முகேஷ் சஹானியை துணை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தார்.

செய்தியாளர்களுடன் பேசிய அசோக் கெலாட்,

“மகாராஷ்டிரத்தில் ஷிண்டே தலைமையில் தேர்தலை நடத்திவிட்டு, பின்னர் வேறொருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகையால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித் ஷாவிடம் கேட்க விரும்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

“நாங்கள் அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது முதல்வராகவோ மட்டும் விரும்பவில்லை, பிகாரை உருவாக்க விரும்புகிறோம். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிந்த அனைத்தையும் செய்வேன். 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை நாங்கள் ஒன்றிணைந்து கவிழ்ப்போம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

நாங்கள் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஒரு கூட்டுச் செய்தியாளர்கள் சந்திப்புகூட நடத்தப்படவில்லை. அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதற்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாஜகவினர் நிதீஷ் குமாரை முதல்வராக்க மாட்டார்கள் என்பதை தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறோம்.

தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தை அழித்துவிடுவார்கள். கட்சி இல்லாமல் போய்விடும்” எனத் தெரிவித்தார்.

Summary

India Alliance Bihar Chief Ministerial Candidate Tejashwi Yadav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com