ஆசியான் மாநாட்டை புறக்கணித்த மோடி! டிரம்ப்புடன் சந்திப்பை தவிர்க்கிறாரா?

ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் AFP
Published on
Updated on
1 min read

மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஆசியான் உச்சிமாநாடு

மலேசியாவில் வருகின்ற அக். 26 முதல் 28 வரை மூன்று நாள்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், பிரதமர் மோடியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தீபாவளிப் பண்டிகை காரணமாக பிரதமர் மோடியால் ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை, இருப்பினும் காணொலி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார் என்று மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மேலும், பிகார் சட்டப்பேரவை பிரசாரத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆசியான் மாநாட்டில் நேரில் பங்கேற்பதை தவிர்த்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

டிரம்ப் சந்திப்பை புறக்கணிக்கிறாரா?

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையாததால், இந்திய பொருள்களின் இறக்குமதிக்கு 25 சதவிகிதம் வரி விதித்துள்ள டிரம்ப், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதித்தார்.

இதனிடையே, இந்தியா - அமெரிக்க அதிகாரிகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனக்கு உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப்புடன் மோடி பேசியதை இந்திய அரசு உறுதிப்படுத்தாத நிலையில் குழப்பம் நீடிக்கிறது.

இந்த நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றால் டிரம்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மலேசிய பயணத்தை மோடி தவிர்த்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்திய வழக்கத்தின்படி, ஒரு நாட்டுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகுதான், தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொள்வார்கள்.

2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, 2022 தவிர அனைத்து ஆசியான் உச்சி மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார். இந்த முறை ஆசியான் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்விலும் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அமைதி மாநாடும் டிரம்ப் தலைமையில் நடைபெற்றதால், மோடி நேரில் செல்வதை தவிர்த்து, வெளியுறவுத்துறை இணையமைச்சரை அனுப்பிவைத்தார்.

Summary

Modi boycotts ASEAN summit! Is he avoiding meeting with Trump?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com