

உலகின் முதல் ஒயர்லெஸ் சார்ஜிங் சாலை நார்வேயில் கடந்த ஆண்டு மத்தியில் அமைக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்துகளாக பேருந்துகள் மின் வாகனங்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அவை இடைநிற்காமல் இயங்க இதுபோன்ற சார்ஜிங் சாலைகள் அவசியம் என்பதை நார்வே வெகு நாள்களுக்கு முன்பே திட்டமிட்டு இந்த சாலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமான எலட்ரியோன் ஒயர்லெஸ் நிறுவனம், நார்வேயில் பல இடங்களில் ஒயர்லெஸ் சார்ஜிங் அமைப்புகளை நிறுவியிருக்கிறது.
இந்த சாலையில் மின் வாகனங்கள் பயணித்தாலே போதும், அந்த வாகனங்கள் சார்ஜ் ஆகிவிடும். இதன் மூலம், மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கும் அதிக பயன் கிடைக்கும்.
சாலையின் கீழ்ப் பகுதியில் காப்பர் கம்பிகள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு 100 மீட்டருக்கு கம்பிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் மின் வாகனங்களுக்கு சார்ஜ் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, மாநகரின் மின் பகிர்மான அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மின் கம்பிகள் வழியாக வரும் மின்சாரம், மின் வாகனங்களின் அடிப் பாகத்தில் இருக்கும் மின்கலன்களுக்கு கடத்தப்பட்டு வாகன பேட்டரிகள் மூலம் சேமிக்கப்படும். ஒயர்லெஸ் மொபைல் சார்ஜிங் முறையில்தான் இவையும் இயங்குகின்றன. இவை ஓராண்டு வரை புதுப்பிக்கத் தேவையில்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நார்வேயில் கடந்த ஆண்டே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை தங்கள் நாடுகளில் புகுத்தத் தயாராகிவிட்டன.
அமெரிக்காவின் மிக்சிகன் நகரின் டெட்ரோய்ட் பகுதியில் 400 மீட்டர் தொலைவுக்கு இந்த சார்ஜிங் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக மின் வாகனங்கள் பயணிக்கும்போது, தானாகவே கார் உள்ளிட்டவை சார்ஜ் ஆகிவிடும்.
சீனாவில் இது சோதனை முறையில் பயன்படுத்தப்படு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எப்போது மின் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனவோ, அப்போதே இதுபோன்ற தொழில்நுட்பங்களையும் புகுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மின் வாகனங்களுக்கு மாற மக்கள் தயங்கும் நிலையில், இந்த சாலைகள், மின் வாகன விற்பனையை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெடுந்தொலைவு பயணிப்போர், மின் வாகனங்களை வாங்கினால் வழியில் சார்ஜ் செய்ய வேண்டியது வரும், போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாத இடங்களில் பயணித்தால் பிரச்னை, சார்ஜ் ஆகும் நேரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு மின் வாகனங்களை வாங்காமல் தவிர்க்கும்போது இந்த சாலைகள் அவர்களது மனதை மாற்றும் என நம்பப்படுகிறது.
இந்தியாவில், சாதாரண தார் சாலைகள் என்றாலே பெரும் பிரச்னையாக இருக்கும் நிலையில், எப்போது இதுபோன்ற சார்ஜிங் சாலைகள் அமைக்கப்படவிருக்கின்றன என்ற கேள்விகள் இந்த செய்திகளை சமூக வலைத்தளங்களில் படிக்கும் எவரொருவருக்கும் எழத்தான் செய்கிறது.
மின் வாகனங்கள் அதிகளவில் விற்பனையாக, சுற்றுச்சூழலுக்கு ஆதரவான நிலை மாற வேண்டும் என்றால், இதுபோன்ற தொழில்நுட்ப புரட்சியிலும் இந்தியா பின்தங்காமல் முன்னேற வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை, ஒயர்லெஸ் சார்ஜிங் சாலைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. எனினும் பல சோதனை முயற்சிகள் நடந்துகொண்டுதானிருகின்றன என்கின்றன தரவுகள்.
இதையும் படிக்க.. வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் பெயர் மொந்தா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.