

பிகார் பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் யாதவ சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு சீட் ஒதுக்கப்படாததால், அந்தக் கூட்டணி பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிகாரில் 243 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காண்பதால் பிகார் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பிகார் தேர்தலில் காங்கிரஸின் மகாபந்தன் கூட்டணித் தரப்பில் நிலவிய இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரின் தாயார் மற்றும் தந்தை இருவரும் பிகாரின் முதல் இருக்கையை அலங்கரிந்துள்ள நிலையில் இவரும் துணை முதல்வராக இருந்துள்ளார்.
பிகாரின் கணிசமாக இருக்கும் யாதவ் சமுதாயத்தினர் தேஜஸ்வியை ஆதரிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல முக்கியத் தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், ஆர்ஜேடிக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும், இவர்கள் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் யாதவ சமுதாய வாக்குகளைக் கவர பல ஆண்டுகளாகப் போராடிவரும் பாஜக இந்த முறை அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளது.
இதனால், பாட்னா சாஹிப்பை தொகுதியை நீண்ட காலமாக பிரதிநிதித்துவப்படுத்திவரும் தற்போதைய பிகார் பேரவைத் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் மற்றும் மானேர் தொகுதியில் வலுவான அடித்தளத்தை உருவாக்கிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் ஓபிசி மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் நிகில் ஆனந்த் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கத் தலைவர்களை கைகழுவி விட்டிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
மானேர் தொகுதி சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், நிகில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
யாதவ சமூக வாக்குகளால் 1990 முதல் 2005 ஆம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரின் மனைவி ராப்ரி தேவியின் கீழ் பிகாரில் ஆட்சி நடைபெற்றது.
அதற்கு பின்னர் வெற்றி பெறாவிட்டாலும், மாநிலத்தில் 14 சதவிகித யாதவ சமூகத்தினர் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு விஸ்வாசம் காட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிகார் சட்டப்பேரவையில் யாதவ சமுதாய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 64 ஆக இருந்து 2005 இல் 54 ஆகக் குறைந்தது. பின்னர் 2010 இல் 39 ஆகவும், பின்னர் 2015 இல் 61 ஆகவும், 2020 இல் 52 ஆகவும் உயர்ந்தது.
நித்யானந்த் ராய் மற்றும் சஞ்சய் ஜெய்ஸ்வால் போன்ற தலைவர்கள் பிகார் மாநில பாஜகவின் பொறுப்பாளர்களாக இருந்தபோதிலும், யாதவ சமுதாய வாக்குகளில் 10 முதல் 20 சதவிகிதம் வரை மட்டுமே பெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமின்றி, ராஷ்டிரிய ஜனதா தளமும் யாதவ சமுதாயத் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சரும், பிகார் சிங்கம் என அழைக்கப்படுபவருமான ராம் லங்கன் சிங் யாதவின் பேரன் ஜெய்வர்தன் சிங்கிற்கு பலிகஞ்ச் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் மண்டல் மெஸ்ஸியா பிபி.மண்டலின் பேரன் நிகில் ஆனந்துக்கு மேதேபுரா தொகுதியிலும் வாய்ப்பை மறுத்துள்ளது.
ஆச்சரியமளிக்கும் விதமாக மூத்த சோசலிசத் தலைவர் ஷரத் யாதவின் மகன் சாந்தனுவுக்கு சீட் கொடுக்க ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்திருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த 52 பேருக்கு சீட் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.