

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு கை, காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ள விடியோவை மத்தியப் பிரதேச காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்தத் தொடரில் இன்று நடைபெறும் லீக் சுற்றின் 26-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் விளையாடின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த வியாழக்கிழமை (அக்.23) ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் இருந்து அருகிலுள்ள ஒரு பிரபலமான ஓட்டலுக்கு ஜாகிங் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து வந்தபோது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்டு பாலியல் அத்துமீறலில் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீராங்கனைகள் காவல் துறையினர் புகாரளித்தனர்.
இந்த விவகாரத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்த நிலையில், இது தொடர்பாக மோசமான செயலுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா வருத்தமும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அகீல் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அகீல் கானின் இடது கை மற்றும் வலது காலில் மாவுக்கட்டுடன் அவரை காவல் துறை அதிகாரிகள் அழைத்து வருவது போன்ற விடியோ ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அவரது கை, காலை காவல் துறையினர் அடித்து உடைத்தனரா? அல்லது கழிவறையில் வழுக்கி விழுந்தாரா? அல்லது தப்பிச் செல்ல முயன்று விழுந்தாரா? என பலரும் விடியோவில் கேள்வியெழுப்பியுள்ளனர். இருப்பினும், காவல் துறை தரப்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பூதகரமாக வெடித்த நிலையில், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக கேள்வியெழுப்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.