

மகாராஷ்டிரத்தில் காவல் உதவி ஆய்வாளரால் பலமுறை வன்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் பால்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர்(28) வியாழக்கிழமை இரவு விடுதி அறையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டபோது அவரது உள்ளங்கையில் எழுதப்பட்டிருந்த தற்கொலைக் குறிப்பில், துணை ஆய்வாளர் கோபால் பட்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சாஃப்ட்வேர் என்ஜீனியர் பிரசாந்த் பங்கர் என்பவரும் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் எழுதியுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உதவி ஆய்வாளர் கோபால் பட்னே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான கோபாலை தனிப்படையினர் தேடி வருகின்றனர். பிரசாந்தை கைது செய்துள்ள போலீசார் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் மருத்துவரின் தற்கொலை சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் எழுதிய தற்கொலை குறிப்பு சிக்கியுள்ளது.
4 பக்க அந்த கடிதத்தில், தன்னுடைய தற்கொலைக்கு காவல் உதவி ஆய்வாளர் கோபால் தான் காரணம் என்றும் அவர் தன்னை 4 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கடந்த 5 மாதங்களாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டடுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் உதவி ஆய்வாளர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கொடுப்பதிலும் உடற்தகுதி சான்று கொடுப்பதிலும் பெண் மருத்துவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளதாக காவல்துறையினரே ஒப்புக்கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்பு அந்த பெண், பிரஷாந்திடம் போனில் பேசியுள்ளதாகவும் உதவி ஆய்வாளர் கோபால், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தததையும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.