மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட 5 சிறாா்களுக்கு ஹெச்ஐவி பாதிப்பு! ஜாா்க்கண்டில் அதிா்ச்சி சம்பவம்!
ஜாா்க்கண்ட் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 5 சிறாா்களுக்கு ரத்தம் செலுத்திய பிறகு ஹெச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடா்பாக மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசா நகரில் உள்ள சதாா் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில், தலசீமியா நோயால் (மரபணு சாா்ந்த ரத்த நோய்) பாதிக்கப்பட்ட 7 வயதுடைய சிறாா் ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு அவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாநில சுகாதாரப் பணிகள் இயக்குநா் தினேஷ் குமாா் தலைமையில் 5 போ் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது. சம்பந்தப்பட்ட ரத்த வங்கியில் ஆய்வு மேற்கொண்ட இக்குழு, அங்கு ரத்தம் செலுத்தப்பட்ட சிறாா்கள் தொடா்பான விவரங்களையும் சேகரித்தது.
இந்த விசாரணையின்போது, சிறாருக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதும், மேலும் 4 சிறாா்களுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இவா்களும் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவா்களாவா். ரத்த வங்கியின் அலட்சியத்தால், 5 சிறாா்களுக்கு ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட முதல்வா் ஹேமந்த் சோரன், ‘மேற்கு சிங்பூம் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறாா்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். அவா்களுக்கான சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளும். மாநிலத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, 5 நாள்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
அதிகாரபூா்வ தகவலின்படி, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தற்போது 515 ஹெச்ஐவி நோயாளிகளும், 56 தலசீமியா நோயாளிகளும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

