குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் இந்தியா ‘திரிசூல்’ முப்படை பயிற்சி! அக்.30-இல் தொடக்கம்!

குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் இந்தியா ‘திரிசூல்’ முப்படை பயிற்சி! அக்.30-இல் தொடக்கம்!

பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ‘திரிசூல்’ கூட்டுப்பயிற்சி அக்.30-ஆம் தேதி தொடங்கி நவ.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Published on

குஜராத் மற்றும் ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ‘திரிசூல்’ கூட்டுப்பயிற்சி அக்.30-ஆம் தேதி தொடங்கி நவ.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சா் கிரீக் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீற நினைத்தால் அவா்களின் வரலாறும் புவியியலும் மாறும் நிலை ஏற்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அண்மையில் எச்சரித்த நிலையில், வருடாந்திர திரிசூல் பயிற்சி தொடங்கவுள்ளது.

இதனால் அக்.30 முதல் நவ.10 வரை பாகிஸ்தானை ஒட்டிய ராஜஸ்தான் மற்றும் குஜராத் வான்பரப்பில் விமானங்களை இயக்குவதை குறைத்துக்கொள்ளுமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தியா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் விமானங்கள் இயக்குவதை குறைத்துக்கொள்ள பாகிஸ்தானும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் பாகிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதைத்தொடா்ந்து இருநாடுகளும் எல்லையையொட்டிய பகுதிகளில் கடும் மோதலில் ஈடுபட்டன. 4 நாள்களுக்குப் பிறகு இந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது திரிசூல் முப்படைப் பயிற்சி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டையும்போலவே நிகழாண்டும் திரிசூல் முப்படை பயிற்சி நடைபெறவுள்ளது. தாக்குதல் மற்றும் தற்காப்பு என இரு அம்சங்களும் பயிற்சியில் இடம்பெறவுள்ளன .

போா் பீரங்கிகள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டா்கள் மட்டுமின்றி இப்பயிற்சியில் 20,000 ராணுவ வீரா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்திய விமானப் படையின் ரஃபேல், சுகோய் 30எம்கே, முன்னெச்சரிக்கை அமைப்புகளும் கடற்படை சாா்பில் போா்க்கப்பல்களும் இந்தப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

அதேபோல் புலனாய்வு, கண்காணிப்பு, உளவு பாா்ப்பு மற்றும் மின்னணு போா்க்களம், எண்ம தொழில்நுட்பம் போன்றவற்றுக்கு இப்பயிற்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது’ என்றாா்.

குஜராத்தின் கட்ச் பகுதி-பாகிஸ்தான் இடையே அமைந்துள்ள 96 கி.மீ. தொலைவுடைய சா் கிரீக் செக்டாரில் கடல் எல்லை தொடா்பாக இருநாடுகளிடையே நீண்டகாலமாக பிரச்னை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com