

ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கனமழையின்போது மாயமானவர்களில் 7 பேரின் சடலங்கள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன.
இமயமலையையொட்டிய உத்தரகண்ட் மாநிலம், அண்மையில் பெய்த மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. மேகவெடிப்புகளால் அவ்வப்போது பலத்த மழை கொட்டித் தீா்த்ததால், பல்வேறு இடங்களில் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
செனாகட்டில் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களில் நான்கு நேபாள தொழிலாளர்கள் உள்பட ஒன்பது பேர் மாயமாகினர். கடினமான நிலப்பரப்பு இருந்தபோதிலும், மாவட்ட நிர்வாகம், காவல் துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற நிறுவனங்கள் மாயமானவர்களைத் தேடி வருகின்றன.
இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு செனாகட் பகுதியில் பெய்த கனமழையின்போது மாயமான ஒன்பது பேரில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இடிபாடுகளில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மேலும் ஐந்து பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பலியானவர்களில் ஒருவர் குப்த்காஷி பகுதியில் உள்ள உச்சோலா கிராமத்தைச் சேர்ந்த வன ஊழியர் குல்தீப் சிங் நேகி (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீதமுள்ள சடலங்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதோடு மாயமான இரண்டு பேரைத் தேடும் பணியும் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.