

அமேசான் பணிநீக்க நடவடிக்கையில் இந்தியாவில் 800 முதல் 1,000 பேர் வேலை இழக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்யறிவு தொழில்நுட்ப வளர்ச்சியினால் பிரபல வர்த்தக மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
இதற்காக கடந்த அக். 27 ஆம் தேதி இந்த நிறுவனத்தில் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. நேற்று(அக். 28) காலை முதல் வேலை இழப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு இ-மெயில்கள் அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலங்களில்உள்ள சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்களில் சுமார் 10% ஊழியர்கள் இதன் மூலமாக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
மனிதவள மேலாண்மை, கருவிகள் மற்றும் சேவைகள் துறை, அமேசான் வெப் சேவைகள் ஆகிய துறைகளில் உள்ளவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டில் சுமார் 27,000 பணியாளர்களை அமேசான் பணி நீக்கம் செய்ததே மிகப்பெரிய எண்ணிக்கையாக இருந்தது.
இந்நிலையில் இந்த பணிநீக்க நடவடிக்கையின் பகுதியாக, இந்தியாவில் இருந்து 800 முதல் 1,000 பேர் வேலை இழக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்ப்பரேட் ஊழியர்கள், பொருள்கள் ஏற்றுமதி, சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பெங்களூர், ஹைதராபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் இந்த பணிநீக்க நடவடிக்கை இருக்கலாம் என்றும் பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு 90 நாள்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.