

பிகார் முதல்வர் பதவி அவர்களின் மகன்களுக்கு அல்ல என்று லாலு பிரசாத் யாதவ், சோனியா காந்தியை மத்திய அமைச்சர் அமித் ஷா சீண்டியுள்ளார்.
பிகாரில் 243 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காண்பதால் பிகார் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பிகார் தேர்தலில் காங்கிரஸின் மகாபந்தன் கூட்டணித் தரப்பில் நிலவிய இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிகார் முதல்வர் நிதீஷ்குமார், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிகாரின் தர்பங்காவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பிகார் பேரவைத் தேர்தலில் பல இளைஞர்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை. லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்க விரும்புகிறார்.
சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியைப் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், இரண்டு பதவிகளும் காலியாக இல்லை என்பதை அவர்களுக்குக் கூற விரும்புகிறேன்.
திருட்டுக் கூட்டமாக மகா கூட்டணியினரின் ஆர்ஜேடி ஆட்சிக் காலத்தில் மாட்டுத்தீவன ஊழல், தார் எனப்படும் பிட்டுமென் ஊழல், நில மோசடியிலும், காங்கிரஸ் கட்சினர் ரூ.12 லட்சம் கோடி அளவில் ஊழலும் செய்துள்ளனர்.
பிகாரில் மீண்டும் காட்டாட்சியைக் கொண்டுவர ராகுல் காந்தியும், தேஜஸ்வியும் முயற்சி செய்துவருகின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.