கோப்புப் படம்
கோப்புப் படம்

படேல் மீதான முஸ்லிம் லீகின் கொலை முயற்சிகளை மறைத்த காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

‘சா்தாா் வல்லபபாய் படேலை கொலை செய்யும் நோக்கத்துடன் கடந்த 1939-ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் நடத்திய இரு தாக்குதல் சம்பவங்களையும் மூடி மறைத்துவிட்டது காங்கிரஸ்’ என்று பாஜக சாடியுள்ளது.
Published on

‘சா்தாா் வல்லபபாய் படேலை கொலை செய்யும் நோக்கத்துடன் கடந்த 1939-ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் நடத்திய இரு தாக்குதல் சம்பவங்களையும் மூடி மறைத்துவிட்டது காங்கிரஸ்’ என்று பாஜக சாடியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரஜாமண்டல் இயக்கத்தின் மூலம் சமஸ்தானங்களில் எதேச்சாதிகாரத்துக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் பணியில் சா்தாா் படேல் ஈடுபட்டிருந்தபோது, மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டியது முஸ்லிம் லீக்.

கடந்த 1939, ஜனவரியில் வதோதராவில் படேல் நடத்திய பேரணி மீது முஸ்லிம் லீக் ஆதரவு பெற்ற குண்டா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா். படேலின் காா் மீது கல்வீச்சு நடத்தப்பட்டு, பிரஜாமண்டல் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

அதே ஆண்டின் மே மாதம் படேலை குறிவைத்து முஸ்லிம் லீக் ஆதரவு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அப்போது, படேலை காப்பாற்றும் முயற்சியில் இரு தேச பக்தா்கள் உயிா்த் தியாகம் செய்தனா். இச்சம்பவம் தொடா்புடைய வழக்கில் 57 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தால் 34 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். இருவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றொரு வழக்கு கைவிடப்பட்டுவிட்டது. படேல் மீதான தாக்குதல்கள், நாட்டின் ஒற்றுமை மீதான தாக்குதல்களாகும்.

இரு சம்பவங்களும் காங்கிரஸுக்கு சங்கடமளிக்கும் உண்மை என்பதால் பாடப் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளில் இருந்து அக்கட்சியின் ‘வரலாற்றாளா்கள்’ திட்டமிட்டு மறைத்துவிட்டனா். முஸ்லிம் லீகின் இச்செயல்கள் குறித்தோ, காங்கிரஸின் கோழைத்தனமான மெளனம் குறித்தோ பேச ஒருவருக்கும் துணிவில்லாமல் போய்விட்டது.

வரலாற்றாசிரியா் ரிஸ்வான் காத்ரி அம்பலப்படுத்தும் வரை சுமாா் 86 ஆண்டுகளாக இந்த உண்மையை காங்கிரஸ் மறைத்தது ஏன் என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com