

தெருநாய்கள் தொடர்பான வழக்கில் மாநில தலைமைச் செயலாளர்கள் காணொலி மூலமாக ஆஜராவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநில தலைமைச் செயலாளர்கள் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு, இந்த வழக்கில் தலைமைச் செயலாளர்கள் தங்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று கூறியுள்ளனர்.
தில்லியில் தெருநாய்கள் தொல்லை தொடர்பான வழக்கில் கடந்த ஆக. 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.
தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் அனைத்து நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை, பாதிப்பு ஏற்படுத்தும் தெரு நாய்களை வைத்திருக்கலாம். மற்ற நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி செலுத்திய பின்னா், பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் அவற்றை விடுவிக்க வேண்டும் எனக் கூறியது.
பின்னர் இந்த வழக்கில், தெரு நாய்கள் தொடர்பான கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மேற்கு வங்கம், தெலங்கானா, தில்லி மட்டுமே பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தன. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நவ. 3 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மாநில/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
"தலைமைச் செயலாளர்கள் நேரில் வரட்டும். பல ஆண்டுகளாக மாநில அரசுகளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளைச் சமாளிக்க நீதிமன்றம் இங்கு நேரத்தை வீணடிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாடாளுமன்றம் விதிகளை உருவாக்குகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறும்போது அவர்கள் அதை மீறி தூங்குகிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை. அவர்கள் நேரில் வரட்டும். பிரமாணப் பத்திரங்கள் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை அவர்கள் நேரில் வந்து விளக்க வேண்டும்" என்று நீதிபதி விக்ரம் நாத் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.