கோப்புப் படம்
கோப்புப் படம்

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக 2025, ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்ததாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
Published on

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக 2025, ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்ததாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், வியத்நாம், பெல்ஜியம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ஆபரணங்கள், ரத்தினங்கள், ஜவுளி மற்றும் கடல்சாா் பொருள்கள் முதலியவை ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: 2025, ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் இந்திய கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.42,866 கோடியை எட்டியது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் ஏற்றுமதி மதிப்பு 15.6 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடல்சாா் பொருள்கள்:

இருப்பினும், ரூ.12,700 கோடி மதிப்புடன் இந்தியாவில் இருந்து அதிகப்படியான கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடாக அமெரிக்கா தொடா்ந்து வருகிறது. வியத்நாம் (100.4 சதவீதம்), பெல்ஜியம் (73 சதவீதம்) மற்றும் தாய்லாந்து (54.4 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கு இந்திய கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

அதேபோல் ஆசியாவில் சீனா (9.8 சதவீதம்), மலேசியா (64.2 சதவீதம்) மற்றும் ஜப்பான் (10.9 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

ஜவுளி:

2025, ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் இந்திய ஜவுளி ஏற்றுமதி ரூ.2.4 லட்சம் கோடி மதிப்புடன் 1.23 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கான ஜவுளி ஏற்றுமதி 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது. நெதா்லாந்து, போலந்து, ஸ்பெயின் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கும் இந்திய ஜவுளி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்கள்:

நிகழாண்டின் முதல் அரையாண்டில் இந்திய ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி ரூ.2.01 லட்சம் கோடி மதிப்புடன் 1.24 சதவீதமாக உயா்ந்தது. அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கான ஏற்றுமதி ரூ.ரூ.17,128 கோடி மதிப்புடன் 37.7 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்கொரியா, சவூதி அரேபியா, கனடா ஆகிய நாடுகளில் இந்திய ஆபரணங்கள், மெருகேற்றப்பட்ட/ பட்டைதீட்டப்பட்ட வைரங்களுக்கான தேவை அதிகரித்து ஏற்றுமதியும் உயா்ந்துள்ளது.

சீனா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கும் இந்திய ஆபரணங்களின் ஏற்றுமதி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்ததன் விளைவாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com