
இந்திய மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததால் இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 25 % வரியை அதிபர் டிரம்ப் விதித்தார்.
இதனிடையே, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் தொடர்ந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்டதால் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது.
இதனால், இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ வெளியிட்டு வருகிறார்.
தற்போது இந்தியாவை ரஷியாவுக்கான சலவைக்கூடம் என்றும் இந்திய மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டி வருவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் பேசியதாவது:
“மோடி ஒரு சிறந்த தலைவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இருக்கும் நிலையில், புதினுடன் எப்படி ஒத்துழைக்கிறார் எனத் தெரியவில்லை.
இந்திய மக்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், தயவுசெய்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்திய மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். இதனை நாம் நிறுத்த வேண்டும்.
உக்ரைன் போருக்கு முன்பு, ரஷியாவிடம் இருந்து இந்தியா பெருமளவிலான கச்சா எண்ணெய்யை வாங்கவில்லை. தற்போது ரஷிய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் கொடுப்பதால், இந்தியா அதனை வாங்கி சுத்திகரித்து, பின்னர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுக்கு அதிக விலைக்கு விற்கிறது. ரஷியாவின் போருக்கு எண்ணெய் ஊற்றுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே, ”ரஷியா - உக்ரைன் போர் ’மோடியின் போர்’. ரஷியாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவது, மாஸ்கோவின் ராணுவ ஆக்கிரமிப்பைத் தூண்டுகிறது. அமைதிக்கான பாதை தில்லி வழியாகதான் செல்கிறது” எனப் பீட்டர் நவரோ குறிப்பிட்டிருந்தது சர்ச்சையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.