
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப். 3) தெரிவித்தார்.
தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரியை குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
சாமானிய மக்களுக்கான பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கு 12%லிருந்து 5%ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு செப். 22 முதல் அமலுக்கு வரும்.
அன்றாட உபயோகப் பொருள்கள்
* பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.
* சோப், ஷாம்பு, பற்பசை போன்ற பொருள்கள் மீது 5% மட்டுமே வரி வசூலிக்கப்படும்.
* வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* நொறுக்குத் தீனிகள் மீது 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்
* வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீதத்திலிருந்து 18% ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது.
* ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவிதத்தில் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* டிராக்டர், அதன் டயர் மற்றும் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கு இனி 18% வரி வசூலிக்கப்படும்.
* சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
* ஜிஎஸ்டி வரியை எந்தவகையில் குறைக்கலாம் என்பது குறித்து கடந்த 9 மாதங்களாக பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
கல்வித் துறையில்...
கல்வித் துறையில் மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் விலக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில்...
* தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
* தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.