
அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார்.
அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த இந்தியா, தற்போது வரி இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசியல் விமர்சகர் ஸ்காட் ஜென்னிங்ஸ் உடனான வானொலி நேர்காணலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்டு, வணிகம் மற்றும் வரி விதிப்பு தொடர்பான நிர்வாகக் கொள்கைகள் குறித்துப் பேசினார்.
அதில், இந்தியா மீதான வரி விதிப்பு குறித்து டிரம்ப் பேசியதாவது,
''அவர்கள் எங்களுக்கு எதிராக வரிவிதிப்பை கடைப்பிடித்து வந்தனர். சீனா, வரி விதித்து எங்களை சீரழித்தது. இந்தியாவும் வரி மூலம் சீரழித்தது. பிரேசிலும் வரி மூலம் அதையேதான் செய்தது. ஆனால், மற்ற நாடுகளின் எந்தவொரு வல்லுநர்களைக் காட்டிலும் வரி விதிப்பை சிறப்பாக புரிந்துகொண்டேன்.
பிறகு என்னுடைய வரிவிதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மீதான வரியை அவர்கள் திரும்பப் பெறுகின்றனர். அதிக வரியை விதிக்கும் நாடு இந்தியா. ஆனால், இப்போது அவர்களே வரி விதிப்பு இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
நான் வரிவிதிப்பை கையில் எடுக்காவிட்டால், அமெரிக்க இறக்குமதிகளுக்கு இது நடந்திருக்காது. வரி விதிப்பு சலுகையை அவர்கள் வழங்கியிருக்க மாட்டார்கள். அதனால், வரி உயர்வை நாம் கொண்டிருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நாம் வலுவாகிவருகிறோம். அவர்கள் இனி எதையுமே சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகாலமாக வணிகம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்திய பொருள்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு 50% வரி விதித்துள்ளார் அதிபர் டிரம்ப். இதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பொருள்களுக்கான ஒருசில வரிகளை அரசு குறைத்தது.
அமெரிக்க வரி விதிப்பைத் தொடர்ந்து, சீனா, ரஷியா உடனான வணிக உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி களமிறங்கியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சமீபத்தில் சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கையும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும் சந்தித்துப் பேசினார்.
இதையும் படிக்க | சீன ராணுவ அணிவகுப்பு! ஒன்றாகக் கலந்துகொண்ட சீன, ரஷிய, வடகொரிய அதிபர்கள்! முதல்முறை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.