
வெளிநாட்டுப் பயணங்களில் சிரித்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார் என்று பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
பிகாரில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமைப் பயணத்தின் போது, அவர் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் மைக்கை எடுத்து அடையாள தெரியாத நபர் ஒருவர், பிரதமா் மோடி மற்றும் அவரது தாயாா் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தது சர்ச்சையானது.
இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, பிகாரில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்டுறவு சங்கத்தை காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பேசினார்.
அப்போது, ”பாரத தாயை அவமதிப்பவா்களுக்கு, எனது தாயாருக்கு எதிராக அவதூறு வாா்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு பொருட்டல்ல. என் தாயாரை அவமதித்தற்காக, நான் வேண்டுமானால் மன்னிக்கலாம், ஆனால், பிகாா் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கருத்து குறித்து செய்தியாளர்களுடன் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:
”யாருடைய தாயையும் யாரும் அவமதிக்கக் கூடாது. நாங்கள் இதை ஆதரிக்கவில்லை, அது எங்கள் கலாச்சாரத்திலும் இல்லை. ஆனால் பிரதமர் மோடி சோனியா காந்தியைப் பற்றிப் பேசியுள்ளார், நிதிஷ் குமாரின் டிஎன்ஏ குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் என் தாயையும் சகோதரிகளையும் அவமதித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பெண்களைத் தொடர்ந்து அவமதிக்கிறார்கள்.
பிகார் மக்களுக்கு எல்லாம் தெரியும். பிரதமர் இவ்வளவு நாள்கள் வெளிநாட்டில் இருந்த போது சிரித்துக் கொண்டிருந்தார், இந்தியா வந்தவுடன் அழத் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.