’க்வாட்’டிலிருந்து வெளியேறி சீன உறவை மேம்படுத்த வேண்டும்! இந்தியாவுக்கு அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஜெஃப்ரி சாக்ஸ் யோசனை!

அமெரிக்க பொருளாதாரப் பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸின் நேர்காணல்....
அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஜெஃப்ரி சாக்ஸ்
அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஜெஃப்ரி சாக்ஸ் Photo | EPS
Published on
Updated on
3 min read

அமெரிக்கா அங்கம் வகிக்கும் ’க்வாட்’ கூட்டமைப்பில் இருந்து வெளியேறி சீனாவுடன் இயல்பான உறவுகளைத் திரும்ப இந்தியா ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பானது அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரானவை என்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பை விளைவிக்கும் என்றும் சாக்ஸ் எச்சரித்துள்ளார்.

யார் இந்த ஜெஃப்ரி சாக்ஸ்?

உலகின் முன்னணி பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜெஃப்ரி சாக்ஸ், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, பொது சுகாதாரம், வறுமை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஐக்கிய நாடுகள் அவையின் மூன்று பொதுச் செயலாளர்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ள சாக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் நிலையான மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் உள்ளார். மேலும், ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டுத் தீர்வுகள் வலையமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவு மற்றும் வர்த்தகக் கொள்கையின் மீதான அச்சமற்ற விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு, தொடர் விளைவுகள் தொடர்பாக, ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின்’ ஜெயந்த் ஜேக்கப்புக்கு ஜெஃப்ரி சாக்ஸ் அளித்த நேர்காணலிலிருந்து...

Q

வரி விதிப்பை அரசியல் மற்றும் பொருளாதார ஆயுதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்துவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நட்பு மற்றும் போட்டி நாடுகள் இடையே வரிப் போரை அதிகரிக்குமா? இந்தியா மற்றும் உலகுக்கு சொல்ல வருவது என்ன?

A

டிரம்ப்பின் வரி விதிப்பானது அமெரிக்க அரசியலமைப்புக்கு விரோதமானது. அரசியலமைப்புச் சட்டம் 1, பிரிவு 8 -ன் கீழ், அமெரிக்க காங்கிரஸுக்கே வரிகளை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. டிரம்ப்பின் வரி விதிப்புகள், அமெரிக்க நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படலாம்.

டிரம்ப்பின் வரிக் கொள்கை, அமெரிக்க பொருளாதாரத்தை போட்டித் தன்மையற்றதாக மாற்றுவதன் மூலமும் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் கடுமையான தீங்குக்கு வழிவகுக்கும். உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளை மீறுவது பலதரப்பு அமைப்பைக் குறைமதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.

இதனால் ஏற்படும் மறைமுக நன்மை என்னவென்றால், தற்போதைய அமெரிக்க அரசானது சட்டத்தை அவமதிக்கிற அரசியல் அமைப்பு, ஊழல் நிறைந்த, நியாயமற்ற மற்றும் நம்பத்தகாதது என்பதை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

Q

ரஷியாவுடன் கச்சா எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதாலும், ஈரானுடன் உறவைத் தொடர்வதாலும், இந்தியா மீது அடுத்தகட்ட தடைகளை அமெரிக்கா அதிகரிக்குமா?

A

இந்தியாவுக்கான பாதுகாப்பு அமெரிக்காவில் இல்லை, பிரிக்ஸ் மற்றும் ஐ.நா.வில் உள்ளது. இந்தியா தனது ஏற்றுமதியைப் பன்முகப்படுத்த வேண்டும். டாலர் அல்லாத கட்டண முறைக்கு பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் க்வாட் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, சீனாவுடனான உறவை இயல்பு நிலைக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும்.

Q

எல்லைப் பிரச்னைகளுக்கு மத்தியில், பிரிக்ஸ், எஸ்சிஓ போன்ற கூட்டமைப்புகள் அல்லது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியாவும் சீனாவும் பொதுவான பொருளாதாரப் பாதையைக் கண்டறிகிறார்களா?

A

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை இந்தியாவும் சீனாவும் கொண்டுள்ளது. இரட்டை நிலைப்பாட்டால் உலகைத் தொடர்ந்து வழிநடத்த முடியும் என்ற மேற்கத்திய நாடுகளின் மாயையான நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருவருக்கும் ஆர்வம் உள்ளது. இரு நாடுகளும் நீண்டகால எல்லைப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆறாவது நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா எடுக்கும் முயற்சியை சீனா வலுவாக ஆதரிக்க வேண்டும். இந்தியா இடம் பெறுவதால் சீனா பெரிதும் பயனடையும்.

Q

உலகளாவிய பல கூட்டமைப்புகளை டிரம்ப் விமர்சித்துள்ளார். வளர்ந்துவரும் பிரிக்ஸ் கூட்டமைப்பால், உலகளாவிய அமெரிக்காவின் இடத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் பயப்படுகிறாரா?

A

ஆம். உலகின் முதன்மையான நாடு அமெரிக்கா என்பது காலாவதியான தோல்வியுற்ற கருத்து. இதற்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நேரடி சவாலாக இருக்கிறது. தற்போது நாம் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திலுள்ள உலகில் வாழவில்லை. அந்த நாள்கள் முடிந்துவிட்டன என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி மற்றும் ஐ.நா. சாசனத்தின் அடிப்படையில் பலதரப்பு உலகத்தை உருவாக்க பிரிக்ஸ் மிக முக்கியமானது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற முன்னாள் பேரரசுகளின் தன்னிச்சையான அதிகாரத்தைப் போன்றது அல்ல.

Q

பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கும் செலாவணி அல்லது உள்ளூர் செலாவணிகளால் வர்த்தகம் மேற்கொண்டால், டாலர் மதிப்புக் குறையும் என்பது நம்பகமான அச்சுறுத்தலா?

A

ஆம், டாலர் மதிப்பு குறையும் என்பது நம்பகமான அச்சுறுத்தல் மட்டுமல்ல, அது ஏற்கெனவே நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்குள் சர்வதேச வர்த்தகம், பணப் பரிமாற்றம் போன்றவற்றில் டாலர் சிறிய பங்கை மட்டுமே வகிக்கும். அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையின் ஆயுதமாக டாலரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதால், பிரிக்ஸ் இந்த மாற்றத்தை துரிதப்படுத்த வேண்டும்.

Q

21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு மிகவும் நெருக்கமானது என்று கூறப்பட்டது. இது டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நீடிக்குமா?

A

இல்லை. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான உறவாக சீனா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் இடையே இருக்கும். நியாயமான, நிலையான, பாதுகாப்பான உலகத்தை உருவாக்க இந்த மூன்று ஜாம்பவான்களும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும்.

உலக மக்கள்தொகையில் வெறும் 4.1 சதவிகிதத்தையும் பொருளாதாரத்தில் 14 சதவிகிதத்தையும் மட்டுமே அமெரிக்கா கொண்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, பல நட்பு நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். மிக முக்கியமான நாடு அல்ல.

Q

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச தாராளவாத ஒழுங்கை எந்த வகையில் டிரம்ப் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறார்? அல்லது ஏற்கெனவே சிதைந்து வருகிறதா?

A

சர்வதேச தாராளவாத ஒழுங்கு என்பது இல்லை. வெளிநாடுகளில் 800 ராணுவத் தளங்கள், சிஐஏ தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், ஒருதலைபட்ச தடைகள், டாலரை ஆயுதமாக்குதல், காஸா இனப்படுகொலைக்கு உடந்தை போன்ற அமெரிக்காவின் ஆதிக்கத்தை மறைக்கும் ஒரு வீண் முழக்கம் மட்டுமே. அமெரிக்காவின் சக்தி குறைந்து வருகிறது.

இந்தியா, சீனா, ரஷியா மற்றும் அமெரிக்கா போன்ற பெரிய சக்திகள் கொண்ட பல துருவ உலகில் தற்போது நாம் இருக்கிறோம். அடுத்தகட்டமாக நமக்குத் தேவைப்படுவது ஐ.நா. சாசனத்தின் கீழ் செயல்படும் சீர்திருத்தப்பட்ட நிறுவனங்கள். குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா இடம்பெற வேண்டும்.

Q

இந்தியாவுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவை மையமாகக் கொண்ட வர்த்தக விநியோகச் சங்கிலியை உருவாக்குவது, அதாவது சீனாவுடன் கூட்டணி அல்லது தோள் கொடுக்கும் நண்பராக்குவது என்ற உத்தி உண்மையில் எந்த அளவுக்குக் கைகொடுக்கும்?

A

ஆனால், அமெரிக்க அரசு, இந்தியா, அதன் மதிப்புமிக்க ஏற்றுமதி நாடாக சீனாவை மாற்ற ஒருபோதும் அனுமதிக்காது. அமெரிக்கா வெளிப்படையாகவே தற்காப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அதேவேளையில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்தால், சீன ஏற்றுமதிகளைப் போலவே வாஷிங்டன் அவற்றையும் தடுக்கும். இதற்கு, இந்தியாவுக்கு 50 சதவீத வரிகள் விதிக்கப்பட்டிருப்பதே சாட்சி.

Q

வர்த்தகப் போரால் செலவினங்கள் உயர்வதன் மூலம், உள்நாட்டு அரசியலில் டிரம்ப் பின்னடைவைச் சந்திக்க நேரிடுமா?

A

ஆம், ஆனால் விளைவுகள் உடனடியாக இருக்காது. டிரம்ப்பின் வர்த்தகப் போர்களால் 5 முதல் 10 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமாகும். எடுத்துக்காட்டாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்களை எதிர்ப்பதன் மூலம் அமெரிக்கா உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் இருந்து பின்னடையும்.

Q

இந்தியா, தன்னுடைய சுய அதிகாரக் கொள்கையை விட்டுக்கொடுக்காமல், அமெரிக்காவுடனான ஆழமான உறவை சமநிலைப்படுத்தும்போது, அதிபர் டிரம்பின் 'அமெரிக்காதான் முதலில்' என்ற நிலைப்பாடு, இந்திய சமநிலையை சிக்கலாக்குமா? அல்லது மேம்படுத்துமா? இந்திய பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் இடையேயான தனிப்பட்ட நட்புறவு பயனளிக்கும் என்று கருதுகிறீர்களா?

A

தனிப்பட்ட நட்பு ஒரு பொருட்டே அல்ல. இந்திய வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் க்வாட் போன்ற அமெரிக்காவின் கூட்டமைப்புகளுடன் இணைவதில் நன்மை இல்லை.

சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா எடுக்கும் ஆபத்தான முயற்சியின் வழியைத் தேர்ந்தெடுக்காமல், ரஷியா, சீனா, ஆப்பிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அனைத்து முக்கிய சக்திகளுடனும் இந்தியா வலுவான உறவை உருவாக்க வேண்டும்.

வாஷிங்டன் மேலாதிக்க மாயையில் இருக்கிறது. அது இந்தியாவுக்கு நல்லதல்ல, அமெரிக்காவின் மாயையில் இந்தியா சிக்கக் கூடாது.

தமிழில் : எஸ். ரவிவர்மா

Summary

American professor Jeffrey Sachs Interview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com