ஏற்கனவே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை இந்தியாவுக்கு மேலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு, ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலையில் 3 அல்லது 4 அமெரிக்க டாலர்கள் விலைத் தள்ளுபடியை ரஷியா அறிவித்திருப்பதாகவும், அமெரிக்க வரி விதிப்புக்கு இடையே ரஷியாவின் இந்த அறிவிப்பு, எரிவதில் எண்ணெய் விடுவதாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரஷியாவின் உரல் வகை கச்சா எண்ணெய் தற்போது வழங்கப்படுவதைக் காட்டிலும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மேலும் விலைச் சலுகையுடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்கு நிதியைப் பெறும் வகையில், ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாகக் குற்றம்சாட்டி, அதற்கு தண்டனையாக இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த வரி விதிப்புகளால், நாட்டில் ஆடை, வைரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அமெரிக்காவிடமிருந்து கடுமையான அழுத்தம் வந்திருக்கும் நிலையில், இந்தியா, அதற்கு செவி சாய்க்காமல், ரஷியா மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், இந்தியாவும் ரஷியாவும் சிறப்பான நட்புறவைக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அதுபோலவே, சீன அதிபரையும் சந்தித்துப் பேசி இரு தரப்பு மோதல்களை மறந்து பல துறைகளில் கூட்டணி அமைப்பது குறித்தும் இரு தலைவர்களும் பேசியிருந்தனர்.
பல நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காட்டிலும் ரஷியாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய் விலை குறைவு என்பதால், இந்தியா அதனை மாற்ற விரும்பவில்லை. இந்த நிலையில்தான் ரஷியாவும் மேலும் விலைத் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.