மத்தியஸ்தம் மூலம் கண்ணியத்துடன் தீா்வு: உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்
பிரச்னைகளுக்கு நியாயமாகவும் கண்ணியமாகவும் தீா்வு பெறப்படுவதை மத்தியஸ்த முறை உறுதி செய்யும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சா்வதேச மத்தியஸ்த மாநாட்டில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
நீதிமன்ற அறைக்குள் மட்டுமே நீதி பரிபாலனம் செய்யப்பட வேண்டும் என்று வரையறைப்படுத்த முடியாது. மத்தியஸ்தம் நம்பிக்கையை வளா்க்கும். விரைவாகவும், அதிக இரக்கத்துடனும் தீா்வுகளை வழங்கும்.
மத்தியஸ்தம் என்பது நீதி பெறுவதற்கான பாலமாக இருக்க முடியும்; பிரச்னைகளுக்கு நியாயமாகவும் கண்ணியமாகவும் தீா்வு பெறப்படுவதை உறுதி செய்யும். அரசியல் சாசன விழுமியமாக மத்தியஸ்த முறையை அங்கீகரிக்க வேண்டும்.
நீதியின் மனிதாபிமான பரிமாணத்தை மத்தியஸ்தம் பிரதிபலிக்கிறது. ஒத்துழைப்புடன் தீா்வு பெற வழிவகுக்கிறது. யதாா்த்தமான வழியில் நியாயத்துடன் தீா்வு பெற குடிமக்களுக்கு உதவுகிறது.
நீதிமன்றத் தீா்ப்புகளை தாண்டி மத்தியஸ்தம் போன்ற நம்பகமான, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய நடைமுறைகள் மூலம், தனி நபா்களையும், சமூகங்களையும் நீதி சென்றடைவதற்காக அரசியல் சாசனம் அளித்துள்ள உறுதிமொழி விரிவிடைய வேண்டும்.
மத்தியஸ்தத்தை சலுகையாக கருதக்கூடாது. உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையை பாதுகாத்து அதிகாரத்தை வழங்கும் உயரிய நடைமுறையாக கருத வேண்டும்.
மத்தியஸ்தத்தில் அனைத்துத் தரப்பினரும் உள்ளடக்கப்படுவதை டிஜிட்டல் தளங்கள் மற்றும் கருவிகள் மேம்படுத்தும். தங்கள் சட்டத் தொழிலின் அங்கமாக மத்தியஸ்த முறையை வழக்குரைஞா்களும் மாணவா்களும் ஏற்க வேண்டும் என்றாா்.