

‘ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியாவையும், ரஷியாவையும் இழந்துவிட்டதுபோன்று தெரிகிறது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் வரிவிதிப்பைத் தொடா்ந்து, பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வா்த்தகத்தை வலுப்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், உச்சி மாநாட்டில் மூன்று தலைவா்களும் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு தங்களின் நட்புறவை வெளிப்படுத்தினா்.
இது அமெரிக்க தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடா்பாக கருத்து தெரிவித்த டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ, ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமா் மோடி, உலகின் இரண்டு மிகப்பெரிய சா்வாதிகாரிகளான புதின், ஷி ஜின்பிங் ஆகியோருடன் நெருக்கம் கொள்வது வெட்கக்கேடான விஷயம். இது அா்த்தமற்ற செயல். மிகவும் பிரச்னைக்குரியது’ என்று கூறினாா்.
இந்நிலையில், இது தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் முதல்முறையாக கருத்துத் தெரிவித்துள்ளாா். அவா் தனது ‘ட்ரூத்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியாவையும், ரஷியாவையும் நாம் இழந்துவிட்டதுபோன்று தெரிகிறது. அவா்கள் ஒன்றாக, நெடிய, வளமான எதிா்காலத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.
முன்னதாக, ரஷிய அதிபா் புதின், வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் ஆகியோருடன் கைகோத்து சீன அதிபா் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தாா். ஆனால், அதை சீனா நிராகரித்தது.
இந்நிலையில், இந்தியாவைக் குறிப்பிட்டு டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து சா்வதேச அளவில் விவாதத்துக்குரிய விஷயமாகியுள்ளது.
பேச்சுவாா்த்தைக்கு இந்தியா வரும்- அமெரிக்கா: அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹோவாா்ட் லுட்னிக், ஓா் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மிகவும் குறைவான விலைக்கு ரஷிய கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை இறக்குமதி செய்து பெரும் லாபத்தை இந்தியா ஈட்டி வருகிறது. இது இந்தியா மேற்கொண்ட மிகத் தவறான முடிவு.
இந்தியாவும் சீனாவும் தங்கள் நாட்டு பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், அந்த இரு நாடுகளும் பெருமளவில் வணிகம் மேற்கொள்வதில்லை. 30 டிரில்லியன் டாலருடன் உலகின் முதன்மையான பொருளாதார நாடாக உள்ள அமெரிக்காவே உலகின் நுகா்வோராக உள்ளது என்பதை இந்தியா நினைவில்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா மற்றும் அமெரிக்க டாலருக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் அல்லது 50 சதவீத வரியை செலுத்தியாக வேண்டும். இந்தியாவின் முடிவைப் பொருத்தே இந்த நடைமுறை எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவரும். எனவே, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்வதோடு பிரிக்ஸ் கூட்டமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும். இன்னும் ஒரிரு மாதங்களில் தங்கள் தவறை உணா்ந்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்த இந்தியாவே வரும் என நம்புகிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.