கர்நாடகத்தில் விநாயகர் ஊர்வலத்தில் மர்ம நபர்கள் கல்வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
மண்டியா மாவட்டம் மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை மாற்று சமூகத்தினர் நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம், இரு சமூகத்தின் இளைஞர்கள் இடையே மோதலை உருவாக்கியது.
தொடர்ந்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், மத்தூரில் ஹிந்து அமைப்பினர் திங்கள்கிழமை காலை ஒன்றுதிரண்டு கல்வீச்சு சம்பவத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்த காவல்துறையினர் அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, “மந்தூரில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, கல்வீச்சு சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.