
குடியரசு துணைத் தலைவர் தேர்தலை, பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தோ்தல் நாளை (செப். 9) நடைபெறவுள்ளது.
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் (67), எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் பி. சுதா்சன் ரெட்டி (79) ஆகியோர் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கே வெற்றி வாய்ப்புள்ளது.
நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவர் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் மூத்த தலைவர்களிடையே நடத்த ஆலோசனைக்குப் பிறகு துணை குடியரசுத் தலைவர் தேர்தலை பிஜு ஜனதா தளம் புறக்கணிக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளிடம் இருந்து பிஜு ஜனதா தளம் கட்சி சமதூரத்தில் உள்ளது. நாங்கள் ஒடிசா மற்றும் அதன் 4.5 கோடி மக்களின் வளர்ச்சி மற்றும் நலனில் கவனம் செலுத்த இருக்கிறோம்” என்றார்
பிஜு ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் யாரும் இல்லை, ஆனால், மாநிலங்களவையில் 7 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக வெளியான தகவல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: மகா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.