
ஜம்மு - காஷ்மீரில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரைச் சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் தோதா தொகுதியின் ஆம் ஆத்மி சட்டப் பேரவை உறுப்பினரான மெஹ்ராஜ் மாலிக், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மெஹ்ராஜ் மாலிக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், இன்று (செப்.11) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை சந்திக்க ஜம்மு - காஷ்மீரில் மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த ஃபரூக் அப்துல்லா வருகை தந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரை அந்த வளாகத்தின் வாசலிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, துணைநிலை ஆளுநர் ஆட்சி செய்வதாகவும், அரசியலமைப்பின் கீழ் பேச முயன்றாலும் தடுக்கப்படுவதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சஞ்சய் சிங், ஃபரூக் அப்துல்லா தடுக்கப்பட்டதை அறிந்து நுழைவு வாயிலின் மீது ஏறி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆளுநர் பதவியிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜிநாமா: குஜராத் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.