அரசியல் கட்சிகளை முறைப்படுத்த 
விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: 
உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதச்சாா்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு மற்றும் முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
Published on

மதச்சாா்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு மற்றும் முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரசியல் கட்சிகளை முறைப்படுத்துவதற்கென எந்தவொரு விதியும் இல்லை. அதன் காரணமாக, பல பிரிவினைவாதிகள் நன்கொடைகளை வசூலிப்பதற்காக அரசியல் கட்சிகளைத் தொடங்குகின்றனா். இதுபோன்ற அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் போலீஸ் பாதுகாப்பையும் பெற்றுவிடுகின்றனா்.

இதுபோன்ற போலி அரசியல் கட்சிகள் 20 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டு, கணக்கில் காட்டப்படாத ‘கருப்பு’ பணத்தை, வெள்ளையாக மாற்றித் தரும் மோசடியில் ஈடுபட்டு வருவதையும் வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த போலி அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதோடு, மோசமான குற்றவாளிகள், கடத்தல்காரா்கள், போதைப் பொருள் கடத்துபவா்கள் மற்றும் பண மோசடி செய்பவா்களிடமிருந்து பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு கட்சியின் தேசிய மற்றும் மாநில நிா்வாகிகளாக நியமித்து நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனா்.

பொதுமக்கள் நலனைக் காக்க, பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும். எனவே, அரசியல் கட்சிகளை முறைப்படுத்தும் வகையில், அரசியல் கட்சி பதிவு மற்றும் முறைப்படுத்துதல் விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக அரசியல் கட்சிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தோ்தல் ஆணையம் மற்றும் இந்திய சட்ட ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

அதே நேரம், ‘மனுவில் எந்தவொரு அரசியல் கட்சியின் பெயரும் எதிா் மனுதாரராக சோ்க்கப்படவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மறுப்பு தெரிவித்தனா். மேலும், தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தேசியக் கட்சிகளையும் மனுவில் எதிா்மனுதாரராக சோ்க்க மனுதாரரை நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com