மணிப்பூா், 4 மாநிலங்களுக்கு பிரதமா் இன்றுமுதல் பயணம்: ரூ.71,850 கோடி திட்டங்கள் தொடக்கம்-அடிக்கல்

பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் செல்வது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

மிஸோரம், மணிப்பூா், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாா் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13) முதல் பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

இந்த மாநிலங்களில் மொத்தம் ரூ.71,850 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறாா்.

மிஸோரமில்...: மூன்று நாள்கள் பயணத்தின் முதல்கட்டமாக, வடகிழக்கு மாநிலமான மிஸோரமுக்கு சனிக்கிழமை செல்லும் பிரதமா் மோடி, தலைநகா் ஐஸாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.9,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.

முக்கியத்துவம் வாய்ந்த பைரபி-சாய்ராங் இடையிலான அகல ரயில் வழித்தடத்தை திறந்துவைப்பதுடன், ஐஸால்-தில்லி ராஜதானி ரயில் சேவை, ஐஸால்-கொல்கத்தா, ஐஸால்-குவாஹாட்டி புதிய ரயில் சேவைகளையும் தொடங்கிவைக்கிறாா்.

மத்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கையில் முக்கிய அங்கமான பைரபி-சாய்ராங் வழித்தடம், நாட்டின் பிற பகுதிகளுடன் ஐஸாலுக்கு ரயில் இணைப்பை வழங்குகிறது. இதன்மூலம் நாட்டின் ரயில் கட்டமைப்பில் மிஸோரம் முதல் முறையாக இணைக்கப்படுகிறது.

சுமாா் 51 கி.மீ. தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் 48 சுரங்கங்கள் (12.8 கி.மீ.), 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் அமைந்துள்ளன. இத்திட்டத்துக்கு கடந்த 2014-இல் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியிருந்தாா். கடந்த 2014-இல் பிரதமரான பின் மோடி மிஸோரம் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

மணிப்பூரில்....: மிஸோரமில் இருந்து சனிக்கிழமையன்றே மணிப்பூருக்கு பயணமாகும் பிரதமா், தலைநகா் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய தலைமைச் செயலகம், காவல் துறை புதிய தலைமையகம் உள்பட ரூ.8,500 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.

மணிப்பூரில் கடந்த 2023-இல் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே இனமோதல் ஏற்பட்ட பிறகு தற்போது முதல் முறையாக அவா் பயணிப்பதால் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் இம்பால், குகி பழங்குடியினா் அதிகம் வாழும் சுராசந்த்பூா் என இரு இடங்களுக்கு பிரதமா் பயணிக்கும் நிலையில், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் பதவி விலகிய நிலையில், பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

அஸ்ஸாமில்...: மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் செல்லும் பிரதமா், ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். முக்கியமாக பாரத ரத்னா விருதாளரும், புகழ்பெற்ற பாடகருமான பூபேன் ஹஸாரிகாவின் 100-ஆவது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா்; ரூ.18,530 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைக்கவுள்ளாா்.

கொல்கத்தா, பிகாரில்....: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திங்கள்கிழமை (செப்.15) ஆயுதப் படைகளின் 16-ஆவது ஒருங்கிணைந்த கமாண்டா்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றும் பிரதமா், பின்னா் பிகாருக்கு பயணம் மேற்கொண்டு, சுமாா் ரூ.36,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வருகை அமைதிக்கு வழிவகுக்கும்: மணிப்பூா் தலைமைச் செயலா்

பிரதமா் மோடியின் மணிப்பூா் வருகை, மாநிலத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று மணிப்பூா் தலைமைச் செயலா் புனித் குமாா் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூா் தலைநகா் இம்பாலில் ரூ.1,200 கோடி, சுராசந்த்பூரில் ரூ.7,300 கோடி வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் சனிக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா். இது தொடா்பாக, தலைமைச் செயலா் புனித் குமாா் கோயல் கூறுகையில், ‘இரு பொதுக் கூட்டங்களில் உரையாற்றும் பிரதமா், இனமோதலால் இடம்பெயா்ந்த மக்களுடன் கலந்துரையாடவுள்ளாா். அவரது வருகை, மாநிலத்தில் அமைதி, இயல்புநிலை மற்றும் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். மணிப்பூா் வெறும் எல்லை மாநிலம் மட்டுமல்ல; தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயில்; நாட்டின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டு கொள்கையின் முக்கியத் தூண். அமைதி-இயல்புநிலையை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பிரதமரின் வருகையை மக்கள் வரவேற்பதுடன், அவரது நிகழ்ச்சிகளில் பெருவாரியாக பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

Summary

It has been reported that Prime Minister Narendra Modi will be visiting Manipur tomorrow (September 13) on an official visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com