
உத்தரகண்டின் டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
உத்தரகண்டில் மேகவெடிப்பு காரணமாக நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இதனால் அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல் துறை குழுக்கள் உள்பட மாவட்ட நிர்வாகத்தின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
தேசிய மீட்புப் படையின் உதவித் தளபதி அஜய் பந்த் கூறுகையில்,
சஹஸ்த்ரதாரா பகுதியில் உள்ள மல்னிகாட் மற்றும் மஜாத் கிராமங்களில் நேற்றிரவு கனமழை பெய்ததால் அங்கு மீட்புக் குழு தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேலும், டேராடூனின் பவுண்டா பகுதியில் அமைந்துள்ள தேவ்பூமி நிறுவன வளாகத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்ததால் அங்குச் சிக்கித் தவித்த 200 மாணவர்களைப் பேரிடர் மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.
மழையால் மாநிலத்தின் பல இடங்களில் சாலைகள், வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. மேலும், தாழ்வான இடங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
டேராடூனில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மால்தேவ்தா மற்றும் கேசர்வாலா பகுதிகளை பகுதிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்தார். மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதல்வர் தாமி உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை நேரில் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.