
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்த செய்யறிவு(ஏஐ) சர்ச்சை விடியோவை உடனடியாக நீக்குமாறு காங்கிரஸூக்கு பாட்னா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயாரைச் சித்திரித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கடந்த செப்.14 ஆம் தேதி பிகார் மாநில காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த விடியோவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மரணமடைந்த ஹீராபென் மோடி, மோடியின் கனவில் வந்து பேசுவதுபோலவும், தேர்தல்களில் வாக்குகளைப் பெற, தன்னைப் பயன்படுத்துவதாகவும் பிரதமர் மோடியை அவர் விமர்சிப்பது போலவும் விடியோ உருவாக்கப்பட்டிருந்தது.
36 விநாடி கொண்ட அந்தக் காணொலியை பிகார் காங்கிரஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்ட நிலையில், இந்த விடியோ விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளை எழுப்பியது.
இதுகுறித்து தில்லி பாஜக தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் மீது தில்லி காவல் துறையால் வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு விவகாரம் குறித்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி. பஜந்தாரி, பிரதமர் மோடியின் தாயார் குறித்த செய்யறிவு விடியோவை அனைத்துவிதமான சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், வேறு யாரும் இந்த விடியோவை பரப்பக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.