
வாக்காளர்களை நீக்க முயற்சித்தது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்து ஆதாரமற்றவை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஆளுங்கட்சியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் சான்றுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததைப் பற்றி சான்றுகளுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், வாக்காளருக்கே தெரியாமல் பக்கத்து வீட்டுக்காரரின் உள்நுழைவுகளைப் பயன்படுத்தி, கால் சென்டர்கள் போன்ற அமைப்புகள் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தெரிவித்திருப்பதாவது:
“மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. ராகுல் காந்தி தவறாக கூறியது போன்று, எந்த வாக்காளரையும் எந்த பொதுமக்களும் ஆன்லைன் மூலம் நீக்க முடியாது.
2023 ஆம் ஆண்டு ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு தோல்வியுற்றன முயற்சிகள் நடந்தன. அதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தரவுகளின்படி, ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் 2018 தேர்தலில் பாஜகவின் சுபாத் குட்டேதரும், 2023 தேர்தலில் காங்கிரஸின் பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றுள்ளனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.