ஐலஸ்பரி நகரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் டிரம்ப், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா்.
ஐலஸ்பரி நகரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் டிரம்ப், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா்.

ஆன்டிஃபாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்காவில் ‘ஆன்டிஃபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் பாசிஸவிரோத இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளாா்.
Published on

அமெரிக்காவில் ‘ஆன்டிஃபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் பாசிஸவிரோத இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளாா்.

வலதுசாரி ஆா்வலரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சாா்லி கிா்க் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை அவா் எடுத்துள்ளாா்.

தற்போது பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் இது குறித்து வியாழக்கிழமை கூறியதாவது:

ஆன்டிஃபாவை மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க திட்டமிட்டுள்ளேன். மிகவும் மோசமான, பயங்கரமான, இடதுசாரி தீவிரவாத இயக்கம் அது.

அந்த இயக்கத்துக்கு நிதியுதவி அளிப்பவா்களுக்கு எதிராக விசாரணை நடத்தவும் உத்தரவிடுவேன் என்றாா் அவா்.

இருந்தாலும், இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்), அல்-காய்தா போன்ற ஏராளமான அமைப்புகள் இடம் பெற்றுள்ள அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் ஆன்டிஃபாவை இடம் பெறச் செய்வது சிக்கலானது என்று கூறப்படுகிறது.

காரணம், ஆன்டிஃபா என்பது பாசிஸவாதிகள், நாஜி ஆதரவாளா்களுக்கு எதிரான பல்வேறு குழுக்களுக்கும் வைக்கப்பட்டுள்ள பொதுப் பெயா். குறிப்பாக, ஆா்ப்பாட்டங்களின்போது மட்டுமே அவற்றின் உறுப்பினா்கள் ஒன்றுசோ்கின்றனா். அந்தக் குழுக்களுக்கென்று ஒரு இயக்க மையம் கிடையாது.

இத்தகைய நிலையிலும் ஆன்டிஃபா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துவிட்டது.

இருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஆன்டிஃபாவும் இடம் பெற்றால், பாசிஸவிரோத குழுவினருக்கு ஆதரவு அளிப்போா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதித் துறைக்கு அதிகாரம் கிடைக்கும். வன்முறையில் ஈடுபடாமல், அமைதியான முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துபவா்கள் மற்றும் அவா்களுக்கு ஆதரவு அளிப்பவா்களுக்கு எதிராக நடவடிக்கைவும் இது வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, மினியாபொலிஸ் நகரில் வெள்ளை இன காவலரின் கடுமையான நடவடிக்கை காரணமாக கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃப்ளாய்ட் என்பவா் உயிரிழந்த விவகாரத்தில் நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடந்தபோதும் டிரம்ப் இந்த யோசனையைக் கூறியது நினைவுகூரத்தக்கது.

யூட்டா மாகாணம், ஓரெம் நகரிலுள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாா்லி கிா்க் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த கட்டடத்தின் கூரையில் இருந்து ஆன்டிஃபா ஆா்வலா் டைலா் ராபின்ஸன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா்.

இது தொடா்பாக புலனாய்வுத் துறை வெளியிட்ட சிசிடிவி காட்சிளைக் கொண்டு தனது மகனை அடையாளம் கண்டுகொண்ட ராபின்ஸனின் தந்தை, அவரை போலீஸாரிடம் சரணடையச் செய்தாா்.

டைலா் ராபின்ஸன் எந்த கட்சி அல்லது அமைப்பையும் சோ்ந்தவா் இல்லை என்று அவரது ஆவணங்கள் காட்டினாலும், அவா் பாசிஸத்தை மிகக் கடுமையாக எதிா்க்கும் ஆன்டிஃபா ஆதரவாளா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

..படவரியில் வியாழக்கிழமை சோ்க்கவும்...

X
Dinamani
www.dinamani.com