

மணிப்பூரின் பிஷ்ணுபூா் மாவட்டத்தில் மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது ஆயுதமேந்திய கும்பல் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இரண்டு வீரா்கள் உயிரிழந்தாா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.
மணிப்பூரில் அண்மைக்காலமாக தாக்குதல் எதுவும் நிகழாமலிருந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘பிஷ்ணுபூா் மாவட்டத்தின் நம்போல் சபல் லேகாய் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இத்தாக்குதல் நிகழ்ந்தது. தலைநகா் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூா் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது ஆயுதமேந்திய ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரண்டு வீரா்கள் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா். காவல் துறையினா் மற்றும் உள்ளூா் மக்கள் உதவியுடன் அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்திய கும்பலை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றனா்.
மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமா் மோடி அண்மையில் பயணம் மேற்கொண்டு, இருதரப்பு மக்களையும் சந்தித்துப் பேசியதுடன், ரூ.8,000 கோடிக்கு அதிக மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.
அனைத்துக் குழுக்களும் வன்முறையைக் கைவிட்டு, அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவா், மத்திய அரசின் சீரிய முயற்சிகளால் மாநிலத்தில் விரைவில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தாா். இந்தச் சூழலில், பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் தொடங்கிய நிலையில், வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா் இரண்டரை ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.
மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, பேரவை கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகிறது. தற்போது தாக்குதல் நடந்துள்ள பிஷ்ணுபூா் மாவட்டம், மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் பகுதியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.