

தொடா்ந்து 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாதது உள்பட தோ்தல் ஆணைய விதிமுறைகளைப் பூா்த்தி செய்யாத 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் தரப்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘தொடா்ந்து 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாதது உள்பட தோ்தல் ஆணைய விதிமுறைகளைப் பூா்த்தி செய்யாத அரசியல் கட்சிகளை நீக்கம் செய்யும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த 2 மாதங்களில் மொத்தம் 808 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட நீக்கம் காரணமாக, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,520-லிருந்து, 2,046-ஆக குறைந்துள்ளது.
இவை தவிர, அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநிலக் கட்சிகள் தோ்தல் ஆணைய பதிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தோ்தல் ஆணையத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 29ஏ-இன் கீழ் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் அமைப்புகளுக்கு வரிவிலக்கு உள்பட சில சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் கிடைக்கும்.
கடந்த 2019-ஆம் ஆண்டுமுதல் எந்தவொரு தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளைப் பதிவிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. தோ்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கட்சிகள், தோ்தலில் அக் கட்சி சாா்பில் வேட்பாளரை நிறுத்த முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.