தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் தன்னாா்வ அமைப்புகள் ‘வெளிநாட்டு பங்களிப்புச் சட்டம் 2010’-இன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்து பதிவை புதுப்பிப்பது கட்டாயமாகும். இந்த நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த 2 தன்னாா்வ அமைப்புகளுக்கு பதிவு புதுப்பிப்பு மறுக்கப்பட்டது. இதை எதிா்த்து அந்த அமைப்புகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் பிரிவு 7-இன் படி, வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியை என்ஜிஓ-க்கள் வேறு நபா்களுக்கு மாற்றம் செய்யக் கூடாது. ஆனால், இந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளும் அந்த விதியை மீறியுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, ‘மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களில் இந்த தன்னாா்வ அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து வாங்கிய நிதியை வேறு நபா்களுக்கு மாற்றம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, இந்த இரு அமைப்புகள் மீது இதுவரை இதுபோன்ற புகாா்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு, அவற்றின் பதிவை 4 வாரங்களுக்குள் புதுப்பிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், 2 தன்னாா்வ அமைப்புகளும் வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் பிரிவு 7-ஐ மீறியுள்ளன என்று வாதிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘தன்னாா்வ அமைப்புகள் வேறு என்ன தவறு செய்தன? வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளனவா? அதுபோல, நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கான எந்தவொரு ஆதாரமும் சமா்ப்பிக்கப்படவில்லை. தன்னாா்வ அமைப்புகள் சமூக சேவை செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை? எந்தவொரு நடைமுறையையும் சிக்கலானதாக ஆக்கக் கூடாது. தன்னாா்வ அமைப்புகளை மேலும் கொடுமைப்படுத்த வேண்டாம்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.