வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவு...
Rahul Gandhi
ராகுல் காந்திX
Published on
Updated on
2 min read

வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த மாதம் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் நேற்று செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது, சேர்க்கப்பட்டது குறித்த மேலும் ஆதாரங்களைக் காட்டினார்.

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதே தவிர, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ராகுல் நேற்று பேசுகையில், வெறும் 36 நொடிகளில் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று ராகுல், தான் பேசிய விடியோ ஒன்றைப் பகிர்ந்து

"அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் தூங்கச் செல்கிறார்கள்!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது!

தேர்தல்களைக் கண்காணிக்கும் அதிகாரி விழித்திருந்து இந்த திருட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார், திருடர்களைப் பாதுகாக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

தோல்வியை ராகுல் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கிரண் ரிஜிஜு

‘அரசமைப்பு நிறுவனங்கள் மீது குறை கூறுவதை விட்டுவிட்டு தொடா் தோ்தல் தோல்விகளுக்கான பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு விமா்சித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் மீதான ராகுலின் தொடா் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

தோ்தல்களில் தொடா்ச்சியாக தோல்வி அடைகிறீா்கள் என்றால், உங்களுடைய பலவீனத்தை ஒப்புக்கொண்டு தலைமைத்துவ தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, தோ்தல் ஆணையம் மீது தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியான நடைமுறையா?

தனது தொடா் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இதுபோன்ற முயற்சிகளை ராகுல் மேற்கொண்டு வருகிறாா். தனது தொடா் தோல்விகளுக்கு வேறு எந்த நிறுவனத்தையும் அவா் குறை கூற முடியாது. அதன் காரணமாகத்தான் தோ்தல் ஆணையத்தை அவா் குறி வைக்கிறாா். மக்கள் இதை ஏற்க மாட்டாா்கள்.

ராகுலின் குற்றச்சாட்டுகள் தேசத்துக்கு எதிரான பிரசாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் என்னென்ன பிரசாரங்களைச் செய்கிறதோ, அதையே ராகுலும் இந்தியாவிலுள்ள அவருடைய நிறுவனமும் (காங்கிரஸ் கட்சி) பரப்புகின்றன. ராகுல் காந்தியும், அவரின் குழுவினரும் பல ஆண்டுகளாக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள், பாகிஸ்தானிலுள்ள இந்தியாவுக்கு எதிரான குழுக்கள் பயன்படுத்தும் கருத்துகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

Wake up at 4 am, delete voters, go to sleep: Rahul Gandhi on vote chori

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com