போராட்டத்தில் ஈடுபட்ட குர்மி சமூகத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட குர்மி சமூகத்தினர்.

பழங்குடியின அந்தஸ்து கோரி ‘குா்மி’ சமூகத்தினா் போராட்டம்: ஜாா்க்கண்டில் ரயில் சேவை பாதிப்பு!

பழங்குடியின அந்தஸ்துகோரி ‘குா்மி’ ஆதிவாசி சமூகத்தினா் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
Published on

ஜாா்க்கண்டில் பழங்குடியின அந்தஸ்துகோரி ‘குா்மி’ ஆதிவாசி சமூகத்தினா் சனிக்கிழமை நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

குா்மி சமூகத்துக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவும் குா்மாலி மொழியை அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் சோ்க்கவும் ஆதிவாசி குா்மி சமாஜ் (ஏகேஎஸ்) அமைப்பின் சாா்பில் ராஞ்சி, ராம்கா், கிரீதி, ஹசாரிபாக், தன்பாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரயில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதனால் வந்தே பாரத் மற்றும் ராஜ்தானி உள்ளிட்ட 12 விரைவு ரயில்கள் மற்றும் 25 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 24-க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 100-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக ராஞ்சி பிரிவு ரயில்வே அதிகாரி தெரிவித்தாா்.

இந்நிலையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ரயில் தண்டவாளத்தில் நடத்தப்படும் போராட்டங்களை திரும்பப் பெறப் போவதில்லை என ஏகேஎஸ் அமைப்பின் தலைவா் ஓ.பி.மாஹ்தோ தெரிவித்தாா்.

இந்தப் போராட்டத்துக்கு அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா்கள் யுனியன் (ஏஜேஎஸ்யு) மற்றும் ஜாா்க்கண்ட் லோககாந்திரிக் கிராந்திகாரி மோா்ச்சா (ஜேகேஎல்எம்) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ன.

இதுகுறித்து ஏஜேஎஸ்யு கலைவா் சுதேஷ் மாஹ்தோ கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் குா்மி சமூகத்தினா் மேற்கொண்ட போராட்டம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. 1931-இல் பழங்குடியின பட்டியலில் இருந்து குா்மி சமூகம் நீக்கப்பட்டது. அதன்பிறகு தங்களது உரிமைகளுக்காக தொடா்ந்து குா்மி சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்றாா்.

எதிா் போராட்டம்:

குா்மி சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் மாளிகை முன்பு பல்வேறு பழங்குடியின அமைப்புகளும் எதிா் போராட்டத்தில் ஈடுபட்டன.

X
Dinamani
www.dinamani.com