சாலைப் பள்ளங்களுக்காக பெங்களூருவை விட்டுச் செல்வதா? பிரபல நிறுவன சிஇஓ

பெங்களூருவில் உள்ள சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படுவது குறித்து...
பெங்களூரு சாலை / ராஜேஷ் யாபாஜி
பெங்களூரு சாலை / ராஜேஷ் யாபாஜி
Published on
Updated on
1 min read

பெங்களூருவில் உள்ள சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதால், அந்நகரில் இருந்து வெளியேறுவதாக பிரபல தளவாட தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருந்தது.

ஊழியர்கள் சாலைப் பள்ளங்கள், போக்குவரத்து நெரிசலால் பணிக்கு வர ஒன்றரை மணிநேரம் ஆவதால், வேறு நகருக்கு நிறுவனத்தை மாற்றவுள்ளதாகவும் காரணங்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், சாலைப் பள்ளங்களுக்காக பெங்களூருவை விட்டுச் செல்வதா? என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் தளவாட தொழில்நுட்ப நிறுவனம் பிளாக்பக். ரூ. 11,000 கோடி மதிப்புடைய இந்நிறுவனம் கர்நாடகத்தின் முக்கிய தளவாட தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

பெங்களூருவில் பெய்து வரும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளதால், ஊழியர்கள் பணிக்கு வர ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஆவதால், பெங்களூருவில் இருந்து வேுறு நகருக்கு நிறுவனத்தை மாற்றவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் யாபாஜி தனது எகஸ் தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் முன்னாள் சி.எஃப்.ஓ. மோகந்தாஸ் பாய், பையோகான் நிறுவன செயல் தலைவர் கிரண் மஸூம்தார் ஷா ஆகியோர் கர்நாடக அரசு அலுவலர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

பெங்களூரு நகரமானது பொருளாதார மையமாகத் திகழ்வதாகவும், தவிர்க்கக்கூடிய காரணங்களுக்காக அதனை விட்டு வெளியேறுவது, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என மோகந்தாஸ் பாய் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரை எட்டியதால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். பெங்களூரு சாலைப் பள்ளங்கள் மற்றும் புழுதி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து மாறுவதாக இருந்த திட்டம் மாறிவிட்டதைக் குறிப்பிட்டு, பிளாக்பக் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் யாபாஜி தெரிவித்துள்ளதாவது,

''பெங்களூரு எங்களுக்கு என்றுமே வீடு போன்றது. நாங்கள் உறுதித்தன்மையுடன் இங்கிருந்தே இயங்க உள்ளோம். எங்களுடைய தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தொடர்புடைய அரசு நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி, பிரச்னைகளுக்குத் தீர்வு காண உள்ளோம். அதோடு மட்டுமின்றி பெங்களூருவிலேயே எங்கள் கிளைகளை விரிவாக்கம் செய்யவுள்ளோம்'' எனவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | மத்தியப் பிரதேசத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com