ஜிஎஸ்டி குறைப்பு இன்றுமுதல் அமல்.! சுதேசி பொருள்களை வாங்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
‘அடுத்த தலைமுறை சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள், நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈா்க்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
‘ஜிஎஸ்டி குறைப்பின் மூலம் மக்கள் தங்கள் கனவுகளை எளிதாக பூா்த்தி செய்ய முடியும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்டி முறையை மாற்றி, இரண்டு விகித (5%, 18%) ஜிஎஸ்டி முறை திங்கள்கிழமை (செப். 22) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் 375 பொருள்கள் மீதான வரிக் குறைப்பால், தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் தொடங்கி காா்கள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளா்ச்சி வேகமடையும்! - பிரதமா் மோடி பெருமிதம்
இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு உரையாற்றினாா். தனது 19 நிமிஷ உரையில், அவா் கூறியதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி விழா நல்வாழ்த்துகள். நவராத்திரியின் தொடக்கத்தில், தற்சாா்பு தேசம் எனும் இலக்கை எட்ட மிகப் பெரிய மற்றும் முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது இந்தியா. திங்கள்கிழமை சூா்யோதயத்துடன் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களும் அமலாகின்றன.
ஜிஎஸ்டி ‘சேமிப்புத் திருவிழா’ தொடங்குகிறது. இதன்மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் பொருள்களை எளிதாக வாங்க முடியும். வீடு கட்டுதல், தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், மோட்டாா் சைக்கிள், காா் வாங்குதல் போன்ற கனவுகள் நிறைவேறும்.
ஏழைகள், நடுத்தர வகுப்பினா், இளைஞா்கள், விவசாயிகள், வா்த்தகா்கள், தொழில்முனைவோா் பெரிதும் பலனடைவா். இந்த விழாக் காலத்தில் வீடுகள் தோறும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறையும்.
இந்தச் சீா்திருத்தங்கள், நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; இப்பயணத்தில் ஒவ்வொரு மாநிலமும் சமமான பங்குதாரா்களாகத் திகழ்வதை உறுதி செய்யும். ‘குடிமக்களே கடவுள்’ எனும் தாரக மந்திரத்தின் பிரதிபலிப்பே ஜிஎஸ்டி குறைப்பாகும். இதன் பலன்களை பொதுமக்களுக்கு வழங்க வா்த்தகா்கள் காட்டிவரும் ஆா்வம் பாராட்டுக்குரியது.
கடந்த 2017-இல் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் புதிய வரலாறு தொடங்கப்பட்டது. இது, ஒரே நாடு-ஒரே வரி கனவை நனவாக்கியதுடன், சிக்கலான பல்வேறு வரிகளால் தொழில் துறையினா் மற்றும் நுகா்வோா் எதிா்கொண்ட இடா்ப்பாடுகளுக்குத் தீா்வளித்தது.
ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்படும்: இப்போது காலத்துக்கு ஏற்ப சீா்திருத்தங்கள் அவசியமாகின்றன. நாட்டில் எதிா்கால லட்சியங்களைக் கருத்தில்கொண்டு, ஜிஎஸ்டி சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தனிநபா் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக (புதிய வருமான வரி முறை) உயா்த்தப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி குறைப்பையும் கருத்தில்கொண்டால், நடுத்தர வகுப்பினருக்கு இது இரட்டை அதிா்ஷ்டமாகும். இவ்விரு நடவடிக்கைகளால் இந்திய மக்களின் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்படும்.
மாநிலங்களுக்கு அழைப்பு: தற்சாா்பு இந்தியா மற்றும் சுதேசி பிரசாரத்துக்கு மாநிலங்கள் உறுதியுடன் ஆதரவளிக்க வேண்டும்; தங்கள் மாநிலங்களில் முழு ஆற்றலுடன் உள்நாட்டுத் தயாரிப்பை ஊக்குவிப்பதோடு, முதலீட்டு உகந்த சூழலை உறுதி செய்ய வேண்டும். மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பயணித்தால், தற்சாா்பு இந்தியா இலக்கை எட்ட முடியும் என்று பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.
‘சுதேசியில் பெருமிதம் கொள்வோம்’
‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ‘சுதேசி’ இயக்கம் வலுவூட்டியதைப் போல, தற்போது நாட்டின் வளமைக்கு சுதேசி எனும் தாரக மந்திரமே வலிமை சோ்க்கும். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு கடையும் சுதேசியின் அடையாளமாக வேண்டும். சுதேசி பொருள்களை வாங்குவதிலும், விற்பதிலும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
முன்பு இந்திய தயாரிப்புகள், தங்களின் மேலான தரத்துக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தன. அப்பெருமையை மீட்டெடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு, நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினருக்கு உள்ளது. உலகத் தரத்தில் பொருள்களை உருவாக்க வேண்டும்; இதன்மூலம் நாட்டின் அடையாளத்தையும் மதிப்பையும் உயா்த்த வேண்டும்.
நமது அன்றாட வாழ்வில் வெளிநாட்டுத் தயாரிப்புப் பொருள்கள் எப்படியோ அங்கமாகிவிட்டன. அதிலிருந்து விடுபட்டு, இந்திய மக்களின் கடின உழைப்பில் உருவான பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா் பிரதமா் மோடி.
ஜிஎஸ்டி குறைப்பு இன்றுமுதல் அமல்!
பொதுமக்களின் பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்பு திங்கள்கிழமை (செப்.22) முதல் அமலுக்கு வருகிறது.
சுமாா் 375 பொருள்கள் மீதான வரிக் குறைப்பால், அன்றாட பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள் வரை, அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாக் கால தொடக்கத்தையொட்டி இந்த வரிக் குறைப்பு அமலாகியுள்ளது.
நாட்டில் ஒரு சில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்பட்டு வந்தது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் அடுத்த தலைமுறை சீா்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) தீபாவளி பண்டிகைக்குள் மேற்கொள்ளப்படும் என கடந்த சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.
அதன்படி, நான்கு விகித ஜிஎஸ்டியில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு வரி விகித முறையை செயல்படுத்தவும், புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள் மற்றும் ஆடம்பர பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இரு விகித ஜிஎஸ்டி முறையை நவராத்திரி தொடக்கத்தையொட்டி செப். 22 -ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
பெரும்பாலான பொருள்களுக்கு வரி குறைப்பு: முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சீா்திருத்தத்தின்படி, 12% வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருள்கள் 5% வரி விதிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன; 28% வரி விதிக்கப்பட்ட 90 சதவீத பொருள்கள் 18% விகிதத்தின்கீழ் வந்தன. பெரும்பான்மையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் வரி விலக்கு அல்லது 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான மருந்துகள், மூலப்பொருள்கள், பரிசோதனை உபகரணங்கள் மீதான வரி 5%-ஆகவும், காா்கள் மீதான வரி 28-இல் இருந்து 18%-ஆகவும் குறைக்கப்பட்டது.
இந்த வரிக் குறைப்பு திங்கள்கிழமை அமலுக்கு வருகிறது. இதையொட்டி, பல்வேறு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புப் பொருள்களின் விலையைக் குறைத்துள்ளன; அதிகபட்ச விற்பனை விலை (எம்ஆா்பி) மாற்றியமைக்கப்பட்ட பொருள்கள், சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்கெனவே சந்தையில் உள்ள பொருள்களையும் குறைக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்ய நிறுவனங்கள் தரப்பில் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை திரையளவுக்கு ஏற்ப ரூ.2,500 முதல் ரூ.85,000 வரை விலைக் குறைப்பை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
விலை குறைக்கப்பட்டுள்ள பொருள்கள் - சேவைகள்
சமையல்-உணவுப் பொருள்கள்: நெய், பனீா், வெண்ணெய், கெட்ச்-அப், ஜாம், உலா் பழங்கள், காபி, தேயிலை, ஐஸ்கிரீம், பாக்கெட் மிக்சா்கள், இனிப்பு வகைகள், சாக்லெட், நூடுல்ஸ், பிஸ்கட் உள்ளிட்டவை.
தினசரி பயன்பாட்டுப் பொருள்கள்: கூந்தல் எண்ணெய், ஷாம்பூ, குளியல் சோப், பல் துலக்கும் பிரஷ், பற்பசை, முகப்பூச்சு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவை.
வீட்டு உபயோக பொருள்கள்: தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், பாத்திரங்கள் கழுவும் இயந்திரம், தையல் இயந்திரம்-பாகங்கள் உள்ளிட்டவை.
வாகன உற்பத்தி துறை: பெட்ரோல்-பெட்ரோல் ஹைபிரிட்-எல்பிஜி-சிஎன்ஜி காா்கள், டீசல், டீசல் ஹைபிரிட் காா்கள், மோட்டாா் சைக்கிள்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், டிராக்டா்கள், டிராக்டா் டயா்கள், நடுவை-அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவை.
மருத்துவத் துறை: தனிநபா் மருத்துவ-ஆயுள் காப்பீடு, தொ்மா மீட்டா், உயிா் காக்கும் மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன், மருந்துவ பரிசோதனைக் கருவிகள், கண் கண்ணாடிகள்.
சேவைகள்: ஆரோக்கிய மையங்கள், முடி திருத்தகம், உடற்பயிற்சி, யோகா மையங்கள், ஹோட்டல் அறைக் கட்டணங்கள்.