
அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.49 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தியர்களுக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து நாஸ்காம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்திய மென்பொருள், சேவை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் வெளியிட்டிருக்கும் தகவலில், எச்-1பி விசா கட்டண உயர்வால், உடனடியாக இந்திய ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இதனால், இந்தியாவில் மென்பொருள் துறையும், அமெரிக்காவில் உள்ளூர் மக்களை பணியமர்த்துவதும் மேம்படும் என குறிப்பிட்டிருக்கிறது.
உயா்த்தப்பட்ட எச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (ஒரு லட்சம் டாலா்) புதிய விண்ணப்பதாரா்கள் ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் டெய்லா் ரோகா்ஸ் விளக்கம் கொடுத்திருந்த நிலையில், நாஸ்காம் இது தொடர்பான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
இது குறித்து நாஸ்காம் கூறியிருப்பதாவது, எச்-1பி விசா கட்டண உயர்வு தற்போது, அமெரிக்காவில் இந்த விசா வைத்திருப்பவர்களைப் பாதிக்காது என்றும் புதிய விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அதுவும் ஒரு முறை செலுத்தும் கட்டணம் என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியிருக்கிறது.
இந்த விளக்கமானது, அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று பணியாற்றி வருபவர்களுக்கும், புதிதாக விண்ணப்பிக்கத் தயாராக இருப்பவர்களுக்கும் குழப்பத்தை நிவர்த்தி செய்வதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
மேலும், எச்-1பி விசா பெற்று, அமெரிக்காவுக்கு வெளியே வாழ்பவர்களுக்கும், தங்களது வணிக நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்த கவலைகளையும் குறைத்துள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் இந்தியர்களின் மற்றும் இந்தியாவை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் எச்-1பி விசாக்களை சார்ந்திருப்பதை கணிசமாகக் குறைத்து, உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்துவதை அதிகரிக்கும். இதனால், இந்திய மென்பொருள் துறையில் ஒரு சிறிய தாக்கம் மட்டுமே ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மேலும், 2026 முதல் இந்தக் கட்டணம் முறை பொருந்தும் என்பதால், அமெரிக்காவில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மேலும் அதிகரிக்கவும், உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்தும் பணிகளை மேம்படுத்தவும் நிறுவனங்கள் அவகாசம் பெறுகின்றன.
ஒருபக்கம் அதிகபட்ச விசா கட்டணம் விதித்து வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் வராமல் தடுக்கும் அதே வேளையில், அமெரிக்காவில் உள்ளூர் திறன் மேம்பாட்டுக்கும் பணியமர்த்துதலை அதிகரிக்கவும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் அந்நாட்டு அரசு செலவிடப்படுகிறது. இதனால், உள்ளூர் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கிடைத்திருக்கும் தரவுகளின்படி, முன்னணி இந்திய மற்றும் இந்தியாவை மையமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களின் எண்ணிக்கை 2015 இல் 14,792 ஆகவும், 2024-இல் 10,162 ஆகக் குறைந்துள்ளது, முதல் 10 இந்திய மற்றும் இந்தியாவை மையமாகக் கொண்ட நிறுவனங்களின் எச்-1பி ஊழியர்கள் எண்ணிக்கை என்பது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே
எனவே, இந்த தரவைப் பார்க்கும்போது, விசா கட்டண உயர்வால், இந்திய மென்பொருள் துறைக்கு ஒரு சிறிய தாக்கம் மட்டுமே ஏற்படலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
எச்-1பி விசா என்பது உயர் திறன் பெற்ற ஊழியர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் வகையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாகும். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளூர் பணியாளர்களுக்கு இணையாக இருக்கும்.
நாஸ்காமின் கூற்றுப்படி, எச்-1பி விசா பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அமெரிக்க பணியாளர்களில் வெறும் சிறு எண்ணிக்கைதான் என்பதை வரையறுத்துள்ளது.
மறுபக்கம், திறமையான இந்திய ஊழியர்கள் நாட்டில் அதிகரிப்பதன் காரணமாக, நாட்டின் வணிக மற்றும் பெரு நிறுவனங்கள், எதிர்கால முதலீட்டு முடிவுகளை எடுக்கவும், ஆராய்ச்சியை விரிவுபடுத்தவும், உலகளாவிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தில் நமது நாட்டை வலுப்படுத்தவும் உதவும் மையமாக நமது நாடு மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.