
விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களும், விமான இருக்கையை முன்பதிவு செய்பவர்களும் ஒரு விஷயத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள், அதுதான் 13வது இருக்கை எண் ஒதுக்கப்படாமல் இருப்பது.
இது ஏதோ தவறுதலாக நடந்த நிகழ்வு அல்லவாம். மக்களின் மனதை அறிந்தே, விமான நிறுவனங்கள், இருக்கைகளுக்கு எண் ஒதுக்கும்போது 12-ஐ அடுத்து 14 என எண் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை மற்றும் உண்மை நிலவரங்களை மதித்தே, விமான சேவை நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், சில பயணிகள், 13வது இருக்கை எண்ணால் சற்று கலக்கம் அடைவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக விமானத்தில் பயணிப்பது என்பதே மக்களுக்கு ஒரு அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். அப்படி இருக்கையில், புதிதாக பயணிப்பவர்களுக்கு, இந்த எண் மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, இந்த 13ஆம் எண்ணைப் பார்த்து பயப்படுபவர்களின் அச்சத்துக்கு ஒரு பெயரும் இருக்கிறது. அதுதான் த்ரிஸ்கைடேகபோபியா. இந்த 13ஆம் எண் பற்றிய பயம் இன்று நேற்றல்ல... 1911ஆம் ஆண்டு முதல் இருந்து வருவதாக, அமெரிக்க மனநலத்துக்கான இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 13ஆம் எண் கெடுபயனைக் கொடுக்கும் என்பது, மத ரீதியாகவும், மூடநம்பிக்கையாகவும், வரலாற்றுப் பதிவுகள் மூலமும் உருவானதாகக் கூறப்படுகிறது.
அதாவது, பல்வேறு புராணக் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள், நிகழ்வுகளும் 13 என்பது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும், 12வது எண் என்பத ஒரு முழுமைபெறும் எண்ணாக இருப்பதும், 12 மாதங்கள், 12 ராசிகள் போன்றவை இருப்பதால், 13வது என்பது ஒரு கூடுதல் எண்ணாகவும் தேவையற்ற எண்ணாகவும் இருப்பதாக மக்கள் கருதத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள், பயணிகளின் நலனுக்காக 13வது இருக்கை எண்ணை அமைப்பதை தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.
சரி எண்களிலேயே 13க்கு மட்டும்தான் இப்படியா என்றால் அதுவும் இல்லை. இத்தாலி, பிரேசில் போன்ற நாடுகளில் 17ஆம் எண் கெடுபயனை அளிக்கும் எண்ணாகப் பார்க்கப்படுகிறது. காரணம் தான் மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது, அதாவது, 17 என்பதை ரோமன் எண்களில் XVII என எழுத வேண்டும். இதை அப்படியே மாற்றினால் VIXI என உருவாகும், இது லத்தீனில் “நான் வாழ்ந்தேன்” என்பதைக் குறிக்கும், இது “என் வாழ்க்கை முடிந்துவிட்டது” எனப் பொருள்படுத்தப்படுகிறது என்பதால் 17ஆம் எண்ணையும் அந்நாட்டு மக்கள் தவிர்த்து விடுவார்களாம்.
இது மட்டுமல்ல, சர்வதேச அளவில் விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், 13 மற்றும் 17 எண் இருக்கைகளை அமைப்பதே இல்லையாம்.
தற்போதைக்கு, லுஃப்தான்சா, ஏர் பிரான்ஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள், 13ஆம் எண்ணை தவிர்த்து விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க... எச்-1பி விசா இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்? நாஸ்காம் விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.