
மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு மோதலுக்கு மத்தியில், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், மராத்தாக்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே மோதல்போக்கு வேண்டுமென்றே உருவாக்கப்படுவதாகக் கூறினார்.
செப்டம்பர் 2 அன்று, ஹைதராபாத் அரசிதழில் மாநில அரசு ஒரு தீர்மானத்தை வெளியிட்டது. கடந்த காலத்தில் குன்பிகளாக அங்கீகரிக்கும் ஆவண ஆதாரங்களை வழங்கக்கூடிய மராத்தா சமூக உறுப்பினர்களுக்கு குன்பி சாதிச் சான்றிதழ்களை வழங்குவதை எளிதாக்க ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்தது.
மாநிலத்தில் மராட்டிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே அதிகரித்து வரும் இடஒதுக்கீடு பிரச்னை மற்றும் பிளவு குறித்துக் கேட்டபோது, சமூகங்களுக்கிடையேயான கசப்புத்தன்மையைக் குறைக்க அரசு பாடுபட வேண்டும்.
முதல்வர் ஃபட்னவீஸ் தலைமை தாங்கி, பிரச்னையை எவ்வாறு குறைக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். என்னைப் போன்ற தலைவர்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த எப்போதும் உதவத் தயாராக உள்ளனர்.
மராத்திய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே மோதல் சூழல் வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசு சில தீர்வு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
பிரச்னையைக் குறைத்து, இந்த சமூகங்கள் கிராமங்களில் தொடர்ந்து இணக்கமாக வாழ்வதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓபிசி மற்றும் மராத்தா சமூகங்களைப் பேச்சுவார்த்தைகளால் ஒன்றிணைக்க வேண்டும். இதுபோன்ற விவாதங்களை ஏற்பாடு செய்ய முதல்வர் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: எச்-1பி விசா எதிரொலி: தொடர் சரிவில் பங்குச் சந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.