
வாக்காளர் அட்டையில் பெயரை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை இந்திய தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
வாக்காளர்களுக்கு தெரியாமல் பெயர் நீக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்த ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம், ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் 6,000 -க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் நீக்குவதற்கு முயற்சி நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்காக வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ராகுல் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINet வலைதளம் மற்றும் செயலியில் புதிதாக மின்-கையொப்பம் (e-sign) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாக்காளர்களாகப் பதிவு செய்ய, நீக்கம் செய்ய அல்லது திருத்தம் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்களை பயன்படுத்தி ஓடிபி பதிவிட்டு அடையாளத்தை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, விண்ணப்பிப்பவர்கள் ஏற்கெனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் (EPIC Number) ஒரு தொலைபேசி எண்ணை பதிவிட்டால் மட்டும் போதும், எவ்வித சரிபார்ப்பும் இன்றி படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.
ஆனால், செவ்வாய்க்கிழமை முதல் படிவம் 6 (புதிய வாக்காளர்கள் பதிவுக்கு), படிவம் 7 (பட்டியலில் பெயரைச் சேர்ப்பது / நீக்குவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பது) அல்லது படிவம் 8 (பதிவுகளைத் திருத்துவது) ஆகியவற்றை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மின்-கையொப்பத்தை கட்டாயம் சரிபார்க்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டவுடன் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மைய தளத்தின் மின்-அடையாள சரிபார்ப்பு தளத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அதில், ஆதார் எண்ணை பதிவிட்டு ஓடிபி மூலம் ஒப்புதல் பெற்றால் மட்டுமே மீண்டும் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்துக்கு திருப்பிவிடப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.