
ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின்கீழ் பிரபல சாமியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தில்லியில் செயல்படும் ஒரு மேலாண்மை படிப்புசார் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகளிடம் அந்நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்நிறுவனம் சிருங்கேரியிலுள்ள புகழ்பெற்ற ‘ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹாசமஸ்தான தக்ஷிணாம்னயம் ஸ்ரீ சாரதா பீடம்’ நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
தெற்கு தில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஸ்ரீ சாரதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மெண்ட்’ நிறுவனத்தின் நிர்வாகத் தலைமைப் பதவியில் இருப்பவர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி. ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் கீழ் செயல்படும் அந்த மையத்திற்கு மாணவிகள் பலர் கல்வி பயில்கின்றனர்.
இந்த நிலையில், நிறுவனத்திற்கு வருகை தரும் பெண்கள் பலருக்கு சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாக புகார் எழுந்துள்ளது.
அந்தக் கல்வி மையத்தில் ‘இ.டபில்யூ.எஸ்.’ என்றழைக்கப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின்கீழ் சேர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவிகளிடம் அநாகரிகமான முறையில் பழகி பாலியல் ரீதியாக எல்லை மீறுவதை மேற்கண்ட சாமியார் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதுவரை அவர் மீது, அந்நிறுவனத்தைச் சேர்ந்த 17 மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமாக, மாணவிகளுக்கு வாட்ஸ்ஆப் வழியாக அருவருக்கத்தக்க மற்றும் ஆட்சேபணைக்குரிய பதிவுகளை அனுப்புவதை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமியாரின் அசைக்கு இணங்குமாறு அந்நிறுவனத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்களும் ஊழியர்களும்(பெண் பணியாளர்களும் அடங்கும்) மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து அவர் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. சுமார் 15க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வெளிநாடுகளுக்கு பறந்து விடாமலிருக்க முன்னெச்சரிக்கையாக லுக் அவுட் நோட்டீஸும் விடுக்கப்பட்டுள்ளது. மாயமான சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதியை கண்டுபிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, சைதன்யானந்தா சரஸ்வதி மீது கடந்த 2006 மற்றும் 2016-இல் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதும் கவனிக்கத்தக்கது. ஆக, பாலியல் துன்புறுத்தல்களை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது இதன்மூலம் தெளிவாக தெரிய வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அவரை அந்நிறுவன நிர்வாக தலைமை பதவியிலிருந்து நீக்கி ஸ்ரீ சிருங்கேரி மட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சைதன்யானந்தா சரஸ்வதி மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சிருங்கேரியின் ‘ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹாசமஸ்தான தக்ஷிணாம்னயம் ஸ்ரீ சாரதா பீடத்திலிருந்து’ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சைதன்யானந்தா சரஸ்வதி என்றழைக்கப்படும் டாக்டர் பார்த்தசாரதி என்பவர், சட்டவிரோத செயல்களிலும் அதேபோல பீடத்தின் நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைஅக்ளிம் ஈடுபட்டிருக்கிறார்.
இதனையடுத்து, அவருடனான அனைத்து தொடர்புகளையும் உறவுகளையும் பீடம் துண்டிக்கிறது. மேலும், சைதன்யானந்தா சரஸ்வதி செய்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக, பீடத்தின் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில் அவர் கடைசியாக ஆக்ரா பகுதியில் இருந்ததைக் கண்டறிந்திருப்பதாக அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். மேலும், அந்த நபர் அடிக்கடி இடம்பெயர்ந்து வருவதால் அவரை தேடிக் கண்டுபிடிப்பது போலீஸாருக்கு சவாலாக மாறியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.