
ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், அக். 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இன் படி, ஜம்மு - காஷ்மீர் (சட்டப்பேரவையுடன் கூடிய) மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஆனால், தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், குலாம் நபி ஆசாத் உள்பட 4 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள் 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் காலியாக இருந்தன.
தற்போது ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான உறுப்பினர்கள் உள்ளதால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ் அரோரா, பஞ்சாப் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், பஞ்சாபில் காலியாக இருக்கும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டி நிலவும் பட்சத்தில் அக். 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.