
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க சிபி-சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சகோதரர் கீனோஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் கட்டி வந்த புதிய வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டு, விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பி.வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
6 மாதத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அரசியல் மற்றும் ஊடக தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
2 பேர் தலைமறைவு
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.