பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை
பயங்கரவாதிகளை வளா்த்துவிடுவது, சொந்த நாட்டு மக்களைக் குண்டுவீசி கொலை செய்வது போன்றவற்றைக் கைவிட்டு, பொருளாதார வளா்ச்சியில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை கூறியது.
ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தர உறுப்பினா் கிஷித்ஜி தியாகி பேசியதாவது:
இந்தியாவுக்கு எதிரான தவறான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது. முக்கியமாக ஐ.நா. கூட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான பிரச்னைகளைத் தூண்டும் வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள (ஆக்கிரமிப்பு காஷ்மீா்) இந்திய பிராந்தியத்தில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.
கடந்த வாரத்தில் பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் குண்டுகளை வீசி 24 பொதுமக்களைக் கொலை செய்துள்ளது. பயங்கரவாதிகளை வளா்க்கும் இடமாகவும் பாகிஸ்தான் திகழ்கிறது. இதுபோன்று தங்கள் சொந்த மக்களைக் குண்டு வீசிக் கொல்வதையும், பயங்கரவாதிகளை ஆதரிப்பதையும் நிறுத்திவிட்டு பொருளாதார வளா்ச்சியில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்.
அந்நாட்டில் ராணுவத்தின் ஆதிக்கத்தின்கீழ் அரசியல் உள்ளது. மனித உரிமைகள் குறியீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் இப்போதும் திகழ்ந்து வருகிறது என்றாா்.