
லடாக் வன்முறை எதிரொலியாக போராட்டத்துக்கு காரணமாகக் கருதப்பட்ட சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்க்சுக் அமைப்பின் வெளிநாட்டு நிதி உரிமம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சமூக ஆர்வலரும், லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கத்தின் நிறுவனருமான சோனம் வாங்க்சுக் என்பவர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். அவரைத் தொடர்ந்து, எல்ஏபி அமைப்பின் ‘ஜென் ஸீ’ இளைஞர் பிரிவினர் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனிடையே, லே நிா்வாகம் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எல்ஏபி அமைப்பினர் முழக்கங்களை எழுப்பியபடி பேரணியை நடத்தி, பாஜக தலைமை அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி, அந்த அலுவலகத்துக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறையைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் வேன் உள்பட பல வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால், பாதுகாப்புப் படையினர் அமைதியை மீட்டெடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தனர்.
இந்த வன்முறை சம்பவத்துக்கு சமூக ஆர்வலரான சோனம் வாங்க்சுக் மீது குற்றஞ்சாட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், “அவரது உண்ணாவிரதமும், அவரின் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய பேச்சுகளும் இளைஞர்களைத் தூண்டிவிட்டதாகவும், அதனாலேயே அவர்கள் பாஜக மற்றும் அரசு அலுவலகங்களை அவர்கள் தாக்கினர்” என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 2021-22 ஆம் ஆண்டில், சோனம் வாங்க்சு, அவரது அமைப்பின் வெளிநாட்டு நிதி பங்களிப்பு கணக்கில் ரூ.3.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். இதில், சட்டப்பிரிவு 17 -ஐ மீறியுள்ளதாகவும், 2020-21 ஆம் ஆண்டுகளில் 3 பேரிடமிருந்து ரூ.54,600 வெளிநாட்டு நிதி பங்களிப்பில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதையும் மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், உணவுப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை போன்ற பிரச்சினைகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் மூலம் ஸ்வீடனில் இருந்து சுமார் ரூ.4.93 லட்சம் வெளிநாட்டு நிதி பெறப்பட்டதையும் மத்திய உள் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இதனாலேயே அவரது லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கத்தின் வெளிநாட்டு நிதிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனை முற்றிலுமாக மறுத்துள்ள சோனம் வாங்க்சுக், இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இதுபோன்ற நிதி முறைகேடுகள் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.