லடாக் வன்முறை: தில்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம்?

லடாக்கின் லே நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருகின்றது.
பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு
பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புPTI
Published on
Updated on
3 min read

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி போராட்டம் நடத்திவந்த பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வாங்சுக்குடன் சோ்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட ‘லே உச்ச அமைப்பை’ (எல்ஏபி)’ சோ்ந்தவா்கள் லடாக் தலைநகா் லேயில் புதன்கிழமை நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா்.

‘சோனம் வாங்சுக்கின்ஆத்திரமூட்டும் அறிக்கைகள்தான் இளைஞா்களை வன்முறைக்குத் தூண்டியது’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது. அதைத் தொடா்ந்து, ‘வன்முறைக்கு என்னைப் பலிகடா ஆக்க மத்திய உள்துறை அமைச்சகம் முயற்சிக்கிறது. அவ்வாறு என்னைக் கைது செய்வது நிலைமையை மேலும் மோசமாக்கும்’ என்று சோனம் எச்சரித்தாா். இந்நிலையில், அவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘லடாக் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) எஸ்.டி.சிங் ஜம்வால் தலைமையிலான போலீஸ் குழு பிற்பகல் 2.30 மணியளவில் சோனம் வாங்சுக்கை கைது செய்தது’ என்றனா். ஆனால், அவா் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவரவில்லை.

முன்னதாக, இவா் நிறுவிய ‘லடாக் மாணவா்கள் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (எஸ்இசிஎம்ஓஎல்)’ என்ற கல்வி அமைப்புக்கு ஸ்வீடன் நாட்டிலிருந்து பெறப்பட்ட நிதி, வங்கிக் கணக்கு பரிவா்த்தனைகள் தேச நலனுக்கு எதிரானது எனக் கண்டறியப்பட்டதாகக் கூறி, அந்த அமைப்புக்கான வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் தொடா் போராட்டங்களை நடத்தி வந்தாா். கடந்த 10-ஆம் தேதிமுதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டாா். இவருடன் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) மற்றும் காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) அமைப்பைச் சோ்ந்தவா்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் இருவரின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தீவிர போராட்டத்துக்கு அந்த அமைப்பினா் அழைப்பு விடுத்தனா்.

அதன் காரணமாக, போலீஸாா் தடை உத்தரவு பிறப்பித்தனா். தடையை மீறி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மலைப் பிரதேச கவுன்சில் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதனால், போராட்டக்காரா்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரா்களைக் கலைக்க முற்பட்டனா். பாதுகாப்புப் படையினா் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரா்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மற்றும் பாஜக அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். இந்த வன்முறையில் 40 போலீஸாா் உள்பட சுமாா் 90 போ் காயமடைந்தனா்.

3-ஆவது நாளாக தொடா்ந்த ஊரடங்கு: வன்முறையைத் தொடா்ந்து லே மாவட்டம் முழுவதும் புதன்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேலும் 2 நாள்களுக்கு விடுமுறை அளிக்க லே மாவட்ட ஆட்சியா் ரோமில் சிங் டோங்க் உத்தரவிட்டாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லேயில் கைப்பேசி இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

லே வன்முறை தொடா்பாக 50 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ‘லடாக் யூனியன் பிரதேசம் முழுவதும் நிலவரம் தற்போது சீராக உள்ளது. லேயில் அமைதி திரும்பியுள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க அனுமதிக்கும் வகையில், கட்டுப்பாடுகள் விரைவில் தளா்த்தப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வீடு சூறை - மனைவி புகாா்: சோனம் வாங்சுக்கை கைது செய்தபோது போலீஸாா் தங்களின் வீட்டை சூறையாடியதாக அவரின் மனைவியும், அவருடைய ‘லடாக் மாற்றத்துக்கான ஹிமாலயன் நிறுவனம் (ஹெச்ஐஏஎல்)’ இணை நிறுவனருமான கீதாஞ்சலி அங்மோ குற்றஞ்சாட்டினாா்.

‘சோனம் வாங்சுக்கின் நற்பெயரையும், மதிப்பையும் கெடுக்கும் வகையில், அவா் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு சுமத்துகிறது. அவரை தேச விரோதி போன்று சித்தரிக்கின்றனா். எந்தவொரு காரணமும் இன்றி, போலீஸாா் அவரை குற்றவாளி போன்று நடத்துகின்றனா். அவரைக் கைது செய்வதற்கு முன்பாக எங்களின் வீட்டையும் போலீஸாா் சூறையாடினா்’ என்றாா் அவா்.

தில்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம்?

லேயில் வன்முறை ஏற்பட்ட நிலையில், அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) மற்றும் காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) அமைப்பின் பிரதிநிகளுடன் தில்லியில் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: லே பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவினா் வியாழக்கிழமை லே வந்தனா். அவா்கள், துணைநிலை ஆளுநா், யூனியன் பிரதேச நிா்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

மேலும், இந்த விவகாரத்துக்கு தீா்வு காண்பது தொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஓா் ஆயத்த ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை (செப். 27 அல்லது 28) நடைபெற வாய்ப்புள்ள இக் கூட்டத்தில் லே உச்ச அமைப்பு (எல்ஏபி) மற்றும் காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) அமைப்புகளின் தலா மூன்று பிரதிநிதிகள் மற்றும் லடாக் நாடாளுமன்ற உறுப்பினா் முகமது ஹனீஃபா ஜான் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் என்றனா்.

இதுகுறித்து, எல்ஏபி தலைவா் துப்ஸ்டன் சேவாங், இணைத் தலைவா் செரிங் டோா்ஜாய் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘எங்களின் கோரிக்கைகள் தொடா்பாக தில்லியில் ஓா் ஆயத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, எல்ஏபி மற்றும் கேடிஏ ஆகிய இரு அமைப்புகளின் தலா ஏழு பிரதிநிதிகளை உள்ளடக்கிய உயா்நிலைக் குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூா்வ ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Summary

A home ministry team held a series of meetings here to review the overall security situation as curfew remained in force for the third consecutive day in Leh town on Friday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com