பிகாரில் வாக்குகளைக் கவர பெண்களுக்கு தலா ரூ.10,000: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்
பிகாா் பேரவைத் தோ்தலில் வாக்குகளைக் கவர பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கியுள்ளாா் பிரதமா் மோடி என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அடுத்த வாரம் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் சுயதொழில் தொடங்க பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். அதன்படி, 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 செலுத்தப்பட்டுள்ளது. தொழிலில் திறம்பட செயல்படும் பெண்களுக்கு அடுத்தக்கட்டங்களாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை முன்வைத்து, பிரதமா் மோடியை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கா்நாடகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் 1.3 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டபோது, ‘இலவச அரசியல்’ என பிரதமா் மோடி தொடா்ந்து விமா்சித்தாா். இப்போது பிரதமரும் அதையே செய்துள்ளாா்.
பிகாரில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பெண்களுக்கு ஒரே தவணையில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. வாக்குத் திருட்டு மட்டுமன்றி, வாக்குகளைக் கவர ‘இலவசம்’ அளிக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளாா் பிரதமா். அவநம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிகாா் பெண்கள் புரிந்து கொள்வா் என்று ஜெய்ராம் ரமேஷ்.